தமிழ்நாடு

கவர்னர் திடீர் டெல்லி பயணம்: மத்திய மந்திரி அமித்ஷாவை சந்திக்க வாய்ப்பு

Published On 2024-02-04 05:18 GMT   |   Update On 2024-02-04 05:18 GMT
  • தமிழ்நாட்டில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகளை ஆளுநர் ரவி தொடர்ந்து தெரிவித்து வருகிறார்.
  • பிப்ரவரி 19-ந் தேதி தமிழ்நாடு பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார்.

சென்னை:

தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் பிப்ரவரி 12-ந்தேதி தொடங்கும் நிலையில் தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி இன்று திடீரென டெல்லி சென்றுள்ளார்.

தமிழ்நாட்டில் ஆளும் தி.மு.க. அரசுடன் கவர்னர் ஆர்.என்.ரவி தொடர்ந்து மோதல் போக்கையே கடைபிடித்து வருகிறார். தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் நிறுத்தி வைப்பது, திருப்பி அனுப்புவது உள்ளிட்டவைகளால் கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

அதன் பிறகு சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தலின் பேரில் கவர்னரும் முதலமைச்சரும் நேரடியாக அமர்ந்து பேசினார்கள். ஆனாலும் இதன் விவரம் வெளியிடப்படவில்லை.

அதே நேரத்தில் தமிழ்நாட்டில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகளை ஆளுநர் ரவி தொடர்ந்து தெரிவித்து வருகிறார்.

தற்போது தமிழ்நாடு சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 12-ந் தேதி தொடங்க உள்ளது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் சட்டசபையில் கவர்னர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்த உள்ளார்.

கடந்த ஆண்டு கவர்னர் உரையில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, காமராஜர், திராவிட மாடல் ஆகியவற்றை தவிர்த்துவிட்டு கவர்னர் ரவி உரையாற்றினார். அத்துடன் அவராகவே சிலவற்றையும் கவர்னர் உரையில் சேர்த்து வாசித்தார். இதனால் தமிழ்நாடு சட்டசபையில் அரசின் உரை மட்டுமே இடம் பெறும். கவர்னர் தன்னிச்சையாக வாசித்த உரை இடம்பெறாது என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தீர்மானத்தை வாசித்தார். உடனே சட்ட சபையில் இருந்து கவர்னர் ஆர்.என்.ரவி வெளிநடப்பு செய்தது பெரும் சர்ச்சையானது.

அண்மையில் கேரளா சட்டசபையில் கவர்னர் முகமது ஆரிப் கான், மாநில அரசின் உரையை முழுமையாக வாசிக்காமல் 1.15 நிமிடம் மட்டுமே வாசித்து விட்டு வெளியேறியதும் பெரும் சர்ச்சையானது. இப்பின்னணியில் தமிழ்நாடு சட்டசபை வரும் 12-ந் தேதி கூடுகிறது. பிப்ரவரி 19-ந் தேதி தமிழ்நாடு பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார்.

நடப்பாண்டின் முதல் கூட்டம் என்பதால் கவர்னர் உரை இடம்பெற உள்ளது. இம்முறை கவர்னர் ரவி என்ன மாதிரியான நிலைப்பாடு எடுக்கப் போகிறார்? என்பது எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது. இச்சூழலில் இன்று திடீரென கவர்னர் ஆர்.என்.ரவி டெல்லி சென்றுள்ளார். டெல்லிக்கு 3 நாட்கள் பயணமாக செல்லும் கவர்னர் ரவி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசுகிறார். இச்சந்திப்பின்போது தமிழ்நாடு நிலவரம் குறித்து கவர்னர் ரவி ஆலோசனை நடத்துவார் என கூறப்படுகிறது.

Tags:    

Similar News