தமிழ்நாடு செய்திகள்

ஊத்தங்கரை அருகே அரசு பேருந்து-மினி லாரி மோதி விபத்து: 14 பயணிகள் படுகாயம்

Published On 2022-12-01 09:33 IST   |   Update On 2022-12-01 09:33:00 IST
  • விபத்தில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்த 14 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
  • விபத்து குறித்து சிங்காரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மத்தூர்:

பெங்களூருவில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு விருதாச்சலம் நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.

இந்த பஸ் இன்று அதிகாலை 2 மணி அளவில் கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே மிட்டப்பள்ளி தனியார் பள்ளி அருகில் வரும்போது எதிரே வந்த மினிலாரி எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தை பார்த்த அந்த வழியாக வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். விபத்தின்போது பஸ்சில் இருந்த பயணிகள் அலறினர்.

விபத்தில் பாண்டிச்சேரியை சேர்ந்த கணபதி (வயது32), திருக்கோவிலூரை சேர்ந்த ரேணுகா (33), சேட்டு (36), மங்களம் பேட்டையை சேர்ந்த சேகர் (40), வேட்டவலத்தை சேர்ந்த முத்து (40), சங்கீதா (31), அரியூரை சேர்ந்த செல்வகுமார் (48), சென்னம்மாள் (40), அரும்பாலவாடியை சேர்ந்த சக்திவேல் (26), கீழ் பெண்ணாத்தூரை சேர்ந்த மேகராஜ் (32), விருத்தாசலத்தை சேர்ந்த ரோஜா (45), கள்ளக்குறிச்சியை சேர்ந்த அலமேலு (40), ஸ்ரீமுஷ்ணம் பகுதியை சேர்ந்த அரசு பஸ் டிரைவர் மூர்த்தி (48), குறிஞ்சிப்பாடியை சேர்ந்த பேருந்து நடத்துனர் வீரமணி (40) உள்பட 14 பேர் பலத்த காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து குறித்து சிங்காரபேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். விபத்தில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்த 14 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் போலீசார் விபத்தில் சிக்கிய லாரி, பேருந்து ஆகியவை அகற்றினர்.

இந்த விபத்து குறித்து சிங்காரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News