தமிழ்நாடு செய்திகள்

பழிக்குப்பழியாக பா.ஜனதா பிரமுகரை தீர்த்துக்கட்டிய கும்பல்- 5 தனிப்படை போலீசார் தீவிர விசாரணை

Published On 2023-04-28 13:05 IST   |   Update On 2023-04-28 13:05:00 IST
  • சங்கர் திருமண மண்டபத்தில் இருந்து காரில் புறப்பட்டது முதலே கொலை கும்பலும் அவரை காரில் பின்தொடர்ந்து வந்து உள்ளனர்.
  • சங்கர் வந்த கார் மீது மொத்தம் 5 வெடிகுண்டுகள் வீசப்பட்டு உள்ளது. இதில் ஒரு பெட்ரோல் குண்டும் இருந்தது.

பூந்தமல்லி:

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வளர்புரம் பகுதியை சேர்ந்த வர் பி.பி.ஜி. சங்கர் (வயது42). இவர் வளர்புரம் ஊராட்சி மன்ற தலைவராகவும், பா.ஜ.க.வில் எஸ்.சி.எஸ்.டி. பிரிவு மாநில பொருளாளராகவும் இருந்து வந்தார்.

நேற்று இரவு 9.30 மணியளவில் சங்கர் கொளத்தூரில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து விட்டு காரில் தனியாக திரும்பி வந்து கொண்டு இருந்தார்.

நசரத்பேட்டை சிக்னல் அருகே பூந்தமல்லி - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டு இருந்தபோது சங்கர் வந்த காரை பின்தொடர்ந்து வந்த மேலும் 2 காரில் வந்தவர்கள் வழிமறித்தனர்.

திடீரென அதில் இருந்து கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் இறங்கிய மர்ம கும்பல் சங்கரின் கார் மீது சரமாரியாக வெடிகுண்டுகளை வீசினர். இதில் காரின் முன்பகுதி கண்ணாடி உடைந்து நொறுங்கியது. காரும் பலத்த சேதம் அடைந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த சங்கர் உயிர் தப்பிக்க காரில் இருந்து இறங்கி சாலையில் ஓடினார். ஆனாலும் மர்ம கும்பல் அவரை ஓட, ஓட விரட்டி சரமாரியாக வெட்டினர். இதில் தலை, முகம், கழுத்தில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த சங்கர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். உடனே கொலை கும்பல் தாங்கள் வந்த காரிலேயே அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். வாகன நெரிசல் மற்றும் போக்குவரத்து அதிகம் இருக்கும் சாலையில் நடந்த இந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து நசரத்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் முன்விரோதத்தில் பழிக்குப்பழியாக சங்கர் தீர்த்து கட்டப்பட்டு இருப்பது தெரியவந்தது.

சங்கர் வழக்கமாக காரில் டிரைவருடன் வருவது வழக்கம். மேலும் காரின் முன்பகுதி இருக்கையில் அமர்ந்து பயணம் செய்வார். நேற்று இரவு சங்கர் டிரைவர் இல்லாமல் காரை ஓட்டி வந்து உள்ளார். இதனை அறியாமல் கொலைகும்பல் முதலில் காரின் முன்பகுதி இருக்கை அருகே வெடிகுண்டை வீசி உள்ளனர். இதில் காரின் கண்ணாடியை உடைத்துக்கொண்டு குண்டு வெடித்து சிதறியது.

இதில் காயமின்றி தப்பிய சங்கர் கொலைகும்பலிடம் இருந்து தப்பிக்க பாதுகாப்புக்காக காரில் வைத்திருந்த சிறிய கத்தியை கையில் வைத்துக்கொண்டு சாலையில் இறங்கி ஓடி உள்ளார். எனினும் மர்ம கும்பல் அவரை தீர்த்து கட்டி விட்டனர்.

சங்கர் வந்த கார் மீது மொத்தம் 5 வெடிகுண்டுகள் வீசப்பட்டு உள்ளது. இதில் ஒரு பெட்ரோல் குண்டும் இருந்தது. கொலை நடந்த இடம் அருகே திருமண மண்டபம் உள்ளது. இதனால் வெடிச்சத்தம் கேட்ட அங்கிருந்த மக்கள் திருமண மண்டபத்தில் நடந்த விசேஷ நிகழ்ச்சியில் வெடிப்பதாக நினைத்து உள்ளனர். சிறிது நேரத்துக்கு பின்னரே வெடிகுண்டு வீசி சங்கர் கொலை செய்யப்பட்ட தகவல் பரவி பரபரப்பு ஏற்பட்டது.

சங்கர் திருமண மண்டபத்தில் இருந்து காரில் புறப்பட்டது முதலே கொலை கும்பலும் அவரை காரில் பின்தொடர்ந்து வந்து உள்ளனர். அவரை நன்கு திட்டமிட்டு கொடூ ரமாக கொலை செய்து விட்டனர்.

கொலையுண்ட சங்கர் மீது 3 கொலை வழக்கு, கொலை முயற்சி உள்பட 15-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இவரும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீபெரும்புதூரில் தொழில் போட்டி காரணமாக கொலை செய்யப்பட்ட தொழிலதிபரான பி.பி.ஜி. குமரனும் நெருங்கிய நண்பர்கள் ஆவர். பி.பி.ஜி. குமரன் கொலை செய்யப்பட்ட அதே பாணியிலேயே பி.பி.ஜி.சங்கரும் வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்யப்பட்டு உள்ளார்.

பி.பி.ஜி குமரன் படுகொலை வழக்கில் தொடர்புடைய குன்றத்தூர் பகுதியை சேர்ந்த ரவுடி ஒருவரை பழிவாங்கும் நோக்கில் பி.பி.ஜி சங்கர் திட்டமிட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த ரவுடி தரப்பினர் முந்திக்கொண்டு சங்கரை தீர்த்து கட்டி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதையடுத்து அந்த ரவுடியை போலீசார் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.மேலும் பி.பி.ஜி குமரன் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான முன்னாள் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய சேர்மனான மண்ணூர் குட்டி என்கிற வெங்கடேசன் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக சங்கர் இருந்தார். எனவே இந்த கொலைக்கு பழிவாங்கும் நோக்கில் கொலை நடந்ததா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதேபோல் சங்கர், ஸ்ரீபெரும்புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள தொழிற்சா லைகளில் உதிரிபா கங்கள் கழிவுகளை வாங்கி விற்பது மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து உள்ளார். தொழில்போட்டி யில் தீர்த்துகட்டப்பட்டாரா என்றும் விசாரணை நடக்கிறது.

கடந்த மாதம் வளர்புரம் பகுதியில் சிலர் நாட்டு வெடிகுண்டு களை வீசி பயிற்சி எடுப்பது போன்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.அந்த தரப்பினர் சங்கரை கொலை செய்தனரா என்றும் விசாரித்து வருகிறார்கள்.

கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. கொலையாளிகள் கோர்ட்டில் சரண் அடைவதை தடுக்கும் வகையில் பூந்தமல்லி, தாம்பரம், செங்கல்பட்டு, அம்பத்தூர் பகுதியில் உள்ள நீதிமன்ற பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். கொலையாளிகள் சிக்கினால்தான் கொலைக்கான காரணம் என்ன? என்ற முழுவிபரம் தெரியவரும்.

பா.ஜனதா பிரமுகர் வெடிகுண்டு வீசி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News