வாலிபரை வெட்டிக் கொன்று உடலை கிணற்றில் வீசிய நண்பர்கள்- 2 பேர் கைது
- போலீசார் அங்கு சென்றபோது அங்குள்ள கிணற்றில் உடல் அழுகிய நிலையில் அஜித் உடல் மிதந்தது.
- வழக்கு தொடர்பாக மேலும் மீஞ்சூர் சூர்யா நகரை சேர்ந்த மோகன், சாய், கணேஷ் ஆகியோரை தேடிவருகிறார்கள்.
பொன்னேரி:
மீஞ்சூர் அடுத்த லட்சுமிபுரம் 2-வது தெருவை சேர்ந்தவர் பச்சையப்பன். இவரது மகன் அஜித் (வயது25). கடந்த 16-ந்தேதி இரவு நண்பர்களுடன் வெளியே சென்ற அஜித் பின்னர் திரும்பி வரவில்லை. பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதுகுறித்து பச்சையப்பன் மீஞ்சூர் போலீசில் புகார் செய்தார். இது தொடர்பாக அஜித்தின் நண்பர்களான மீஞ்சூரை அடுத்த ராமரெட்டி பாளையத்தை சேர்ந்த நாகராஜ், மீஞ்சூர் லால் பகதூர் சாஸ்திரி தெருவை சேர்ந்த கார்த்திக் என்கிற திருட்டு கார்த்திக் ஆகியோரை பிடித்து விசாரித்தனர்.
அப்போது அவர்கள் மதுகுடிக்கும் போது ஏற்பட்ட தகராறில் நண்பர்களுடன் சேர்ந்து அஜித்தை வெட்டி கொலை செய்து விட்டதாகவும், அவரது உடலை ராம ரெட்டிபாளையம் ஏரிக்கரை பகுதியில் புதர் அருகே உள்ள கிணற்றில் வீசி இருப்பதாகவும் தெரிவித்தனர்.
இதைத்தொாடர்ந்து போலீசார் அங்கு சென்றபோது அங்குள்ள கிணற்றில் உடல் அழுகிய நிலையில் அஜித் உடல் மிதந்தது. உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அஜித்தின் கை, கால்கள் அவர் அணிந்து இருந்த ஆடையால் கட்டப்பட்டு இருந்தது.
விசாரணையில் கடந்த 16-ந்தேதி இரவு அஜித் மற்றும் அவரது நண்பர்கள் மதுகுடித்த போது மோதல் ஏற்பட்டு உள்ளது. பின்னர் வீட்டுக்கு சென்ற அஜித்தை மீண்டும் அழைத்து நண்பர்கள் கொடூரமாக வெட்டி கொலை செய்து விட்டு, அவரது கை, கால்களை கட்டி உடலை அருகில் உள்ள கிணற்றில் வீசி சென்று இருப்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அஜித்தின் நண்பர்களான நாகராஜ், கார்த்திக் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வழக்கு தொடர்பாக மேலும் மீஞ்சூர் சூர்யா நகரை சேர்ந்த மோகன், சாய், கணேஷ் ஆகியோரை தேடிவருகிறார்கள்.
இவர்களில் கார்த்திக் மற்றும் மோகன் மீது ஏற்கனவே 7 குற்ற வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. அஜித் கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து மீஞ்சூர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வாலிபரை நண்பர்களே வெட்டிக்கொன்று விட்டு உடலை கிணற்றில் வீசி சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.