தமிழ்நாடு

ஓட்டப்பிடாரத்தில் காற்றாலை ஆக்கிரமிப்பை கண்டித்த முன்னாள் எம்.எல்.ஏ. மீது தாக்குதல்

Published On 2023-09-03 09:41 GMT   |   Update On 2023-09-03 09:41 GMT
  • எதிர்ப்பு தெரிவித்த சுந்தர்ராஜ் போலீஸ் மற்றும் வருவாய்த்துறையினரிடம் புகார் அளித்தார்.
  • காற்றாலை பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

ஓட்டப்பிடாரம்:

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் சுந்தர்ராஜ். பின்னர் அவர் அ.ம.மு.க.வில் இணைந்ததால் எம்.எல்.ஏ. பதவியை இழந்தார்.

பின்னர் நடந்த இடைத் தேர்தலில் அ.ம.மு.க. சார்பில் போட்டியிட்டபோது அவர் தோல்வியடைந்தார். தற்போது அக்கட்சியில் மாநில நிர்வாகியாக இருந்து வருகிறார்.

இவருக்கு சொந்தமான கல் மற்றும் சரள் குவாரி ஓட்டப்பிடாரம்-பாளை சாலையில் உள்ளது. தற்போது செயல்படாமல் இருக்கிறது. அதில் தோட்டம் அமைத்துள்ளார். அந்த தோட்டத்தினையும், அதன் நீர்வழிபாதையையும் ஆக்கிரமித்து தனியார் நிறுவனம் ஒன்று காற்றாலை அமைத்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சுந்தர்ராஜ் போலீஸ் மற்றும் வருவாய்த்துறையினரிடம் புகார் அளித்தார். அதன்பேரில் காற்றாலை பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று மீண்டும் அந்த பகுதியில் பணிகள் தொடங்கப்பட்டதை அறிந்த சுந்தர்ராஜ் அங்கு சென்று பணியை நிறுத்துமாறு கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த காற்றாலை ஊழியர்கள் சுந்தர்ராஜை கீழ தள்ளி இரும்பு கம்பியால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அவர் ஓட்டப்பிடாரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

இதுகுறித்து அவர் அளித்த புகாரின்பேரில் ஓட்டப்பிடாரம் போலீசார் காற்றாலை ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் காற்றாலை தரப்பில் ஊழியர் ஹரி, தன்னை சுந்தர்ராஜ் தாக்கியதாக கூறி தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தார். இதுகுறித்தும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News