தமிழ்நாடு செய்திகள்

மரக்கூழ் ஆலையில் மின்கசிவால் தீ விபத்து- சிலிண்டர் வெடித்ததில் டிரைவர் படுகாயம்

Published On 2023-06-21 12:01 IST   |   Update On 2023-06-21 12:01:00 IST
  • ஆலையில் இருந்த சிலிண்டரில் தீப்பற்றியதால், திடீரென அந்த கியாஸ் சிலிண்டர் வெடித்துச்சிதறியது.
  • சுதந்திர ஸ்டீபனுக்கு அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நெல்லை:

நெல்லையை அடுத்த முன்னீர்பள்ளம் அருகே ஓமநல்லூர் கிராமம் உள்ளது. இங்கு பாளையை சேர்ந்த ஆசீர்வாதம் என்பவர் மரக்கூழ் ஆலை நடத்தி வருகிறார். அங்கிருந்து தினமும் மரத்தூள்கள் கட்டிகளாக மாற்றப்பட்டு பின்னர் லாரிகளில் ஏற்றி வியாபாரத்திற்கு அனுப்பப்படுவது வழக்கம்.

இன்று அதிகாலை வழக்கம்போல் ஆலையில் பணிகள் நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது அங்கிருந்த மரப்பொடி அடங்கிய கட்டு மீது மின்கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு நின்று கொண்டிருந்த லாரி டிரைவரான பாளையை சேர்ந்த சுதந்திர ஸ்டீபன்(வயது 35) என்பவர், பற்றி எரிந்த தீயை அணைக்க முயன்றுள்ளார்.

அப்போது ஆலையில் இருந்த சிலிண்டரில் தீப்பற்றியதால், திடீரென அந்த கியாஸ் சிலிண்டர் வெடித்துச்சிதறியது. இந்த விபத்தில் சுதந்திர ஸ்டீபன் பலத்த தீக்காயம் அடைந்தார். உடனே அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் முன்னீர்பள்ளம் போலீசார் மற்றும் பாளை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ஸ்டீபனை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தீயணைப்பு துறையினரும் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து ஆலையில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.

இதற்கிடையே சுதந்திர ஸ்டீபனுக்கு அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

Tags:    

Similar News