ஓ.பி.எஸ்., டி.டி.வி.தினகரன் கூடாரம் விரைவில் காலியாகும்- எடப்பாடி பழனிசாமி பேட்டி
- ஓ.பி.எஸ்.- டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர்களாக இருந்தவர்கள் அ.தி.மு.க.விற்கு வந்து விட்டார்கள்.
- ஈரோடு இடைத்தேர்தல் தொடர்பாக ஆளுங்கட்சியான தி.மு.க.வுக்கு தோல்வி பயம் வந்து விட்டது.
மதுரை:
மதுரையில் எடப்பாடி பழனிசாமி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் அ.தி.மு.க. வலிமையான இயக்கம். இன்று உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது. அ.தி.மு.க.வில் உள்ள 1½ கோடி தொண்டர்களின் விருப்பத்தை தீர்ப்பு உணர்த்தி உள்ளது. இனிமேல் தமிழகத்தில் அ.தி.மு.க. எழுச்சியோடு பணியாற்றும்.
ஓ.பி.எஸ்.- டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர்களாக இருந்தவர்கள் அ.தி.மு.க.விற்கு வந்து விட்டார்கள். சிலர் தீர்ப்புக்காக காத்திருந்தார்கள். இன்று தீர்ப்பும் வந்துவிட்டது. இனி மீதம் உள்ளவர்களும் எங்களிடம் வந்து சேர்ந்து விடுவார்கள். ஓ.பி.எஸ்., டி.டி.வி.தினகரன் கூடாரம் விரைவில் காலியாகும்.
தற்போது எங்களது நோக்கம் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளரை பல்லாயிரக்கணக்கான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைப்பதே ஆகும்.
இதற்காக மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி ஒவ்வொரு வாக்காளர்களையும் நேரில் சந்தித்து வாக்கு சேகரிப்போம். ஈரோடு இடைத்தேர்தல் தொடர்பாக ஆளுங்கட்சியான தி.மு.க.வுக்கு தோல்வி பயம் வந்து விட்டது. இதன் காரணமாகத்தான் வாக்காளர்களை அடைத்து வைத்துள்ளார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.