அ.தி.மு.க. கூட்டணிக்கு சீமானை இழுக்க எடப்பாடி பழனிசாமி அதிரடி திட்டம்
- நாம் தமிழர் கட்சி சீமானால் தொடங்கப்பட்டு 13 ஆண்டுகள் ஆகிறது.
- கூட்டணி விஷயத்தில் சீமான் எடுக்கும் முடிவே இறுதி முடிவாக இருக்கும் என்றும் அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
சென்னை:
பாரதிய ஜனதா கூட்டணியில் இருந்து வெளியேறிய அ.தி.மு.க. பாராளுமன்ற தேர்தலில் புதிய கூட்டணியை உருவாக்க அதிரடியாக காய் நகர்த்தி வருகிறது.
இதுதொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வியூகம் வகுத்து வருகிறார். அ.தி.மு.க. கூட்டணியில் ஏற்கனவே இடம் பெற்றிருந்த தோழமை கட்சிகளான பா.ம.க., தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகளை மீண்டும் கூட்டணியில் சேர்த்துக் கொண்டு புதிதாக மெகா கூட்டணியை அமைக்க அவர் முடிவு செய்துள்ளார். இதற்கான பேச்சுவார்த்தைகள் ரகசியமாக நடைபெற்று வருகின்றன.
இந்த கூட்டணியில் புதிய கட்சியாக சீமானின் நாம் தமிழர் கட்சியை சேர்ப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சீமானிடம் விரைவில் வெளிப்படையாக பேச்சுவார்த்தை நடத்தி கூட்டணிக்கு இழுக்க அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகள் முடிவு செய்திருக்கிறார்கள். ஏற்கனவே ரகசிய பேச்சுவார்த்தைகள் நடைபெற்று உள்ளன.
இதுதொடர்பாக அ.தி.மு.க. நிர்வாகி ஒருவர் கூறும்போது, பா.ஜனதா கூட்டணியில் இருந்து வெளியேறிய பிறகு அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க பல கட்சிகள் ஆர்வமாக உள்ளன. அந்த வகையில் சீமானின் நாம் தமிழர் கட்சியை அ.தி.மு.க. கூட்டணிக்கு இழுத்து கொண்டு வருவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன என்று தெரிவித்தார்.
இதுபற்றி நாம் தமிழர் கட்சியினர் கூறும்போது, "எங்களுக்கு கூட்டணி அழைப்பு வந்தது உண்மை தான் என்று தெரிவித்தனர்.
இதுதொடர்பாக அக்கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறும்போது, நாம் தமிழர் கட்சியை பொறுத்தவரையில் தனித்து போட்டியிடும் முடிவில் உறுதியாகவே இருக்கிறோம். ஆனால் அரசியலில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்றும் தெரிவித்தார்.
நாம் தமிழர் கட்சி சீமானால் தொடங்கப்பட்டு 13 ஆண்டுகள் ஆகிறது. இதுவரை நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலுமே அந்த கட்சி தனித்தே போட்டியிட்டுள்ளது. சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தல்களில் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வந்த போதிலும் குறிப்பிடத்தக்க அளவில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் வாக்குகளை பெற்றுள்ளனர்.
2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி 7 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. அந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு 3-வது இடம் கிடைத்தது. 170-க்கும் அதிகமான தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு அடுத்த இடத்தை பிடித்து சாதித்திருந்தனர். உள்ளாட்சி தேர்தலில் பல இடங்களில் வெற்றியும் பெற்றிருந்தனர்.
நாம் தமிழர் கட்சயின் இந்த வாக்கு சதவீதம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதனால் வருகிற பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வாக்கு சதவீதம் 10 சதவீதத்தை தாண்ட வாய்ப்பிருப்பதாக அரசியல் நோக்கர்கள் கணித்துள்ளனர். இதை மனதில் வைத்துதான் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சீமானை அ.தி.மு.க. கூட்டணிக்கு இழுத்துவிட வேண்டும் என்பதில் தீவிரமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆனால் நாம் தமிழர் கட்சிகள் கூட்டணி தொடர்பாக மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. ஒரு பிரிவினர் கூட்டணி அமைக்கலாம் என்றும், இன்னொரு பிரிவினர் கூட்டணி வேண்டாம் என்கிற கருத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் கூட்டணி விஷயத்தில் சீமான் எடுக்கும் முடிவே இறுதி முடிவாக இருக்கும் என்றும் அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் விஜயகாந்தை சேர்த்து ஜெயலலிதா வெற்றி பெற்றார். அதே பாணியில் தற்போது சீமானை கூட்டணியில் சேர்த்துக் கொண்டால் வெற்றி பெற்று விடலாம் என்று எடப்பாடி பழனிசாமி கணக்கு போட்டிருப்பதாக அ.தி.மு.க.வின் தெரிவித்து உள்ளனர். எடப்பாடி பழனிசாமியின் இந்த வியூகம் பலன் அளிக்குமா? அ.தி.மு.க. கூட்டணியில் சீமான் சேருவாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.