தமிழ்நாடு செய்திகள்

டி.டி.வி. தினகரனை திவாலானவராக அறிவிக்க அமலாக்கத்துறை நடவடிக்கை- ஐகோர்ட்டில் மூத்த வக்கீல் தகவல்

Published On 2023-08-11 14:00 IST   |   Update On 2023-08-11 14:00:00 IST
  • டி.டி.வி. தினகரனிடம் அபராதத் தொகை ரூ.31 கோடியை வசூலிக்க நடவடிக்கை எடுக்க அமலாக்கத்துறை இயக்குனருக்கு உத்தரவிட வேண்டும்.
  • பொதுநல வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி. கங்கா புர்வாலா, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

சென்னை:

சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்தவர் எஸ். பார்த்திபன். இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்து உள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:-

அ.ம.மு.க., தலைவர் டி.டி.வி.தினகரன் மீது அன்னிய செலாவணி மோசடியில் ஈடுபட்டதாக கூறி, அவருக்கு ரூ.31 கோடி அபராதம் விதித்து அமலாக்கத்துறை இயக்குனர் கடந்த 1998-ம் ஆண்டு பிப்ரவரி 6-ந்தேதி உத்தரவிட்டார். ஆனாலும், அவர் ரூ.31 கோடி அபராத தொகையை இதுவரை செலுத்தவில்லை.

எனவே, டி.டி.வி. தினகரனிடம் அபராதத் தொகை ரூ.31 கோடியை வசூலிக்க நடவடிக்கை எடுக்க அமலாக்கத்துறை இயக்குனருக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

இந்த பொதுநல வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி. கங்கா புர்வாலா, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது டி.டி.வி.தினகரன் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் பி.குமார், "டி.டி.வி. தினகரனிடம் இருந்து அபராதத்தை வசூலிக்க அமலாக்கத்துறை இயக்குனர் நடவடிக்கை எடுத்தார்.

இதை எதிர்த்து டி.டி.வி.தினகரன் சிவில் வழக்கை தாக்கல் செய்துள்ளார். அதேபோல, டி.டி.வி.தினகரனை திவாலானவர் என்று அறிவிக்க அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது" என்று கூறினார்.

இதை பதிவு செய்துக் கொண்ட நீதிபதிகள், மூத்த வக்கீலின் விளக்கம் மனுதாரருக்கு பதிலாக கிடைத்துவிட்டதால், அதை பதிவு செய்து வழக்கை முடித்து வைக்கிறோம் என்று தீர்ப்பளித்தார்.

Tags:    

Similar News