தமிழ்நாடு

 கைதான நாகுகுமார், சக்திவேல்.

இலங்கைக்கு கடத்த இருந்த ரூ.6 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்- கைதான 2 பேரிடம் அதிரடி விசாரணை

Published On 2023-09-08 08:20 GMT   |   Update On 2023-09-08 08:20 GMT
  • சந்தேகத்திற்கு இடமாக கடற்கரையில் நின்று கொண்டிருந்த 2 பேர் போலீசாரை கண்டதும் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர்.
  • போதைப் பொருள் கடத்தலில் யாருக்கும் தொடர்பு உள்ளதா? எனவும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ராமேசுவரம்:

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் கடல் வழியாக எளிதில் இலங்கை பகுதியை சென்றடையலாம் என்பதால் இங்கிருந்து மஞ்சள், பீடி இலைகள், கஞ்சா உள்ளிட்டவை அதிக அளவில் கடத்தப்பட்டு வருகிறது.

அதேபோல் சமீபத்தில் இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட பல கோடி மதிப்பிலான தங்கத்தை கடத்தல்காரர்கள் போலீசாரை கண்டதும் கடலில் தூக்கி வீசிச்சென்ற சம்பவமும் நடந்தது. இதையடுத்து கடலோர பகுதிகளில் இந்திய கடற்படையினர் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அருகே உள்ள வேதாளை கடற்கரை பகுதி வழியாக இலங்கைக்கு போதைப் பொருட்கள் கடத்தப்பட இருப்பதாக ராமேசுவரம் துணை போலீஸ் சூப்பிரண்டு உமாதேவிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனைதொடர்ந்து, வேதாளை கடற்கரை பகுதியில் டி.எஸ்.பி. உமாதேவி, சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ் தலைமையில் அப்பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக கடற்கரையில் நின்று கொண்டிருந்த 2 பேர் போலீசாரை கண்டதும் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர்.

இதனால் சுதாரித்துக் கொண்ட போலீசார் அவர்களை விரட்டி சென்று பிடித்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் அவர்கள் மறைத்து வைத்திருந்து பார்சலை பிரித்து சோதனையிட்டபோது மெத்தா பெட்டமென் என்ற விலை உயர்ந்த போதைப் பொருள் வைத்திருப்பது தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து, போதை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரிடமும் விசாரணை செய்தபோது அதே பகுதியை சேர்ந்த நாகுகுமார், சக்திவேல் என்பதும், இவர்கள் சென்னையில் இருந்து இலங்கை கடத்துவதற்கு கொண்டு வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் சர்வதேச மதிப்பு 6 கோடி ஆகும். ஐஸ் வகை போதை பொருளான இவை எங்கிருந்து கொண்டு வரப்பட்டது? மேலும் இந்த போதைப் பொருள் கடத்தலில் யாருக்கும் தொடர்பு உள்ளதா? எனவும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வேதாளையில் சமீப காலமாக போதைப்பொருள், தங்கம் உள்ளிட்ட பொருட்கள் கடத்தல் நடை பெற்று வருவது குறிப்பி டத்தக்கது. 

Tags:    

Similar News