தமிழ்நாடு

மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது மாண்டஸ் புயல்

Published On 2022-12-09 03:03 GMT   |   Update On 2022-12-09 22:15 GMT
  • இன்று காலை ஆழ்ந்த காற்றாழுத்த தாழ்வு மண்டலமாக மாறும்.
  • மதியம் காற்றாழுத்த தாழ்வு பகுதியாக மாறி உள்மாவட்டங்கள் வழியாக கடக்கும்.

சென்னை மக்களை அச்சுறுத்தி வந்த மாண்டஸ் புயலின் மையப்பகுதி இரவு 2.30 மணி அளவில் கரையை கடந்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயலின் பின்பகுதி அடுத்த ஒரு மணிநேரத்தில் கரையை கடக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

2022-12-09 21:38 GMT

இரவு 2.30 மணி அளவில் மாண்டஸ் புயலின் மைய பகுதி கரையை கடந்தது. புயல் முழுமையாக கரையை கடக்க மேலும் ஒரு மணி நேரம் ஆகும் என தகவல் 

2022-12-09 20:17 GMT

மாண்டஸ் புயல் கரையை கடப்பது மேலும் 2 மணி நேரம் நீடிக்கும். அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல். ராணிப்பேட்டை, வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, சேலம், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்பட 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் அறிவிப்பு

2022-12-09 19:33 GMT

மாண்டஸ் புயல் மாமல்லபுரத்திலிருந்து தென்கிழக்கே 10 கி.மீ தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 50 கி.மீ தொலைவிலும் நெருங்கியுள்ளது. புயல் அடுத்த 2 அல்லது 3 மணிநேரத்திற்குள் கரையை முழுமையாக கடந்து விடும். புயல் கரையை கடந்தாலும் காலை வரை மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

2022-12-09 19:00 GMT

மாண்டஸ் புயலின் மையப்பகுதி மாமல்லபுரத்தில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இதனால் வட தமிழக கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இரவு 11.45 மணி நிலவரப்படி காட்டுபாக்கத்தில் 112 மில்லி மீட்டரும், மீனம்பாக்கத்தில் 77 மில்லி மீட்டரும், திருவள்ளூரில் 55 மில்லி மீட்டரும் மழை பதிவாகி உள்ளது. மாதவரத்தில் 78 மில்லி மீட்டரும், நுங்கம்பாக்கத்தில் 97 மில்லி மீட்டரும் மழை பதிவானது. 

2022-12-09 18:37 GMT

மாண்டஸ் புயல் மாமல்லபுரத்தை நெருங்கிய நிலையில், கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் உள்ள உத்தண்டியில் கடல் சீற்றம் காணப்பட்டது. இதனால் குடியிருப்பு பகுதிகளுக்குள் கடல்நீர் புகுந்தது. பலத்த காற்று காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

2022-12-09 17:41 GMT

மாண்டஸ் புயல் கரையைக் கடந்து வருவதால் சென்னை மாநகர போக்குவரத்துக் கழக இரவு நேர பேருந்துகளின் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. காலை 4 மணிக்கு வழக்கம் போல் பேருந்துகள் இயக்கப்படும் என்று மாநகர போக்குவரத்து கழகம் தகவல்

2022-12-09 17:41 GMT

மாண்டஸ் புயல் கரையைக் கடந்து வருவதால் சென்னையின் காசிமேடு உள்ளிட்ட பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. கனமழை மற்றும் சூறாவளி காரணமாக சென்னை முதல் அரக்கோணம் வரை செல்லும் மின்சார ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி உள்ளனர். 

2022-12-09 17:20 GMT

புயலின் கண் பகுதி எனப்படும் மையப்பகுதியானது கடல் பகுதியில் உள்ளது. அடுத்த ஒரு மணி நேரத்தில் புயலின் கண் பகுதி கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கரைகடக்கும் நிகழ்வானது இரண்டு அல்லது மூன்று மணி நேரத்துக்கு நிகழும் என வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறினார்.

2022-12-09 16:44 GMT

அடுத்த ஒரு மணி நேரத்தில் புயலின் கண் பகுதி கரையை கடக்க தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புயல் கரையை நெருங்கியதால் தரைக்காற்றின் வேகம் படிப்படியாக அதிகரிக்கிறது.

2022-12-09 16:38 GMT

மாண்டஸ் புயலின் வெளிப்பகுதி மாமல்லபுரம் அருகே கரையை கடக்க தொடங்கி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மணிக்கு 14 கி.மீ. வேகத்தில் புயல் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் புயல் கரையை கடந்து வருவதால் தரைக்காற்றின் வேகம் அதிகரித்துள்ளது. 60 முதல் 80 கி.மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசி வருகிறது. 

Tags:    

Similar News