தமிழ்நாடு

குமரி மாவட்டத்தில் தொடர்ந்து கடல் சீற்றம்- கடற்கரை பகுதிகள் வெறிச்சோடின

Published On 2024-05-22 09:02 GMT   |   Update On 2024-05-22 09:02 GMT
  • படகுகளை பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி வைத்திருந்தனர்.
  • மீனவர்கள் கடலுக்கு செல்லாதால் கடற்கரை கிராமங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

நாகர்கோவில்:

தென்கிழக்கு வங்கக் கடலில் புயல் சின்னம் இன்று காலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக குமரி மாவட்டத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் கன்னியாகுமரி முதல் நீரோடி வரை உள்ள கடற்கரை கிராமங்களில் இன்று காலை முதலே கனமழை பெய்து வருகிறது. கன்னியாகுமரியில் இன்று மதியம் சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதனால் கடற்கரையில் இருந்த சுற்றுலாப் பயணிகள் ஓட்டம் பிடித்தனர். சில சுற்றுலா பயணிகள் குடை பிடித்தவாறு கடல் அழகை ரசித்தனர். அப்போது குடையை சூறைக்காற்று தூக்கி சென்றது.

மேலும் அந்த பகுதியில் கடல் சீற்றத்துடனும் காணப்பட்டது. ராட்சத அலைகள் 10 முதல் 15 அடி உயரத்திற்கு எழும்பின. இதையடுத்து சுற்றுலா பயணிகள் அங்கிருந்து வெளியேறினார்கள். முட்டம் , ராஜாக்கமங்கலம் துறை, நீரோடி, குளச்சல், தேங்காய்பட்டினம், சொத்தவிளை உள்ளிட்ட அனைத்து மீனவ கிராமங்களிலும் இன்று கடல் சீற்றமாக காணப்பட்டது. மழையும் விட்டுவிட்டு பெய்தவாறு இருந்தது.

ஏற்கனவே மீனவர்கள் கடலுக்கு செல்லக்கூடாது என்று மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் பெரும்பாலான மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. மீனவர்கள் தங்களது படகுகளை பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி வைத்திருந்தனர். மீனவர்கள் கடலுக்கு செல்லாதால் கடற்கரை கிராமங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. குமரி மாவட்டத்தில் கனமழையுடன் சூறைக்காற்றும் நீடிப்பதால் பொதுமக்கள் யாரும் நீர்நிலைகள் அருகே செல்ல வேண்டாம் என்றும், நீர்நிலைகள் பகுதிகளில் நின்று செல்பி எடுக்க வேண்டாம் என்றும் கலெக்டர் ஸ்ரீதர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags:    

Similar News