தமிழ்நாடு

வடசென்னை தொகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரம்

Published On 2024-04-16 03:08 GMT   |   Update On 2024-04-16 06:57 GMT
  • மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிக்க வருகிறார் என்பதை அறிந்த பொதுமக்கள் அவரை பார்ப்பதற்காக வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தனர்.
  • சாலையின் இருபுறமும் திரண்டிருந்த மக்கள் வெள்ளத்தில் நீந்தியபடி வேட்பாளர் கலாநிதி வீராசாமிக்கு ஆதரவு திரட்டினார்.

சென்னை:

தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் இந்தியா கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கடந்த மாதம் 25-ந்தேதியில் இருந்து பிரசாரம் செய்து வருகிறார்.

தமிழ்நாடு-புதுச்சேரியில் இதுவரை 16 பிரமாண்ட பொதுக்கூட்டங்களில் 36 தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் திறந்த ஜீப்பில் வீதிவீதியாக பிரசாரம் செய்தார்.

வடசென்னை தொகுதிக்குட்பட்ட கொளத்தூர் ஜி.கே.எம். காலனிக்கு இன்று காலையில் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிக்க வருகிறார் என்பதை அறிந்த பொதுமக்கள் அவரை பார்ப்பதற்காக வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தனர்.

உடனே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காரை விட்டு இறங்கி நடந்து சென்று வீடு வீடாக தி.மு.க. அரசின் சாதனைகள் அடங்கிய கையடக்க நோட்டீசுகளை பொதுமக்களுக்கு வழங்கினார்.

அதனை பெற்றுக்கொண்ட பொதுமக்கள் அவருக்கு வணக்கம் தெரிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

ஜி.கே.எம். காலனி தெருக்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓட்டு கேட்டு வருவதை அறிந்த பொதுமக்களும், கட்சி நிர்வாகிகளும் சாலையின் இருபுறமும் அவரை பார்ப்பதற்காக திரண்டு நின்றிருந்தனர். வழிநெடுக ஆண்களும், பெண்களும் உதயசூரியன் சின்னத்தையும், தி.மு.க. கொடியையும் காண்பித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை வரவேற்றபடி நின்றிருந்தனர்.

வீடு வீடாக துண்டு பிரசுரம் வழங்கி வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதன் பிறகு திறந்த ஜீப்பில் ஏறி வீதி வீதியாக சென்றார்.

சாலையின் இருபுறமும் திரண்டிருந்த மக்கள் வெள்ளத்தில் நீந்தியபடி வேட்பாளர் கலாநிதி வீராசாமிக்கு ஆதரவு திரட்டினார்.

வழி நெடுக பொதுமக்கள் முகமலர்ச்சியோடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்றனர். திறந்த ஜீப்பில் 'ரோடுஷோ' போல் மெதுவாக சென்றபடி பொதுமக்களை பார்த்து அவர் கையசைத்தார். பதிலுக்கு பொதுமக்களும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பார்த்து கையசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

தொடர்ந்து ஜீப்பில் சென்றபடி மக்களை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்குள்ள பூங்கா அருகில் இளைஞர்கள் விளையாடுவதை பார்த்ததும் ஜீப்பில் இருந்து இறங்கி மைதானத்திற்கு சென்று அவர்களை சந்தித்தார்.

அவர்கள் வைத்திருந்த பந்தை வாங்கி அதில் கையெழுத்திட்டு கொடுத்தார். அதோடு கால்பந்தை தனது காலால் தட்டி விளையாட்டை தொடங்கி வைத்தார்.

அதன் பிறகு மீண்டும் ஜீப்பில் ஏறி வீதிவீதியாக சென்று மக்களை பார்த்து ஆதரவு திரட்டினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பார்ப்பதற்காக இஸ்லாமிய மக்களும் திரண்டு வந்திருந்தனர். அவர்களை பார்த்ததும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரு கை கூப்பி வணங்கினார். பதிலுக்கு பொதுமக்களும் முக மலர்ச்சியோடு கையசைத்து வரவேற்பு தெரிவித்தனர்.

ஜி.கே.எம். காலனியில் 32 தெருக்களுக்கும் சென்று வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதன் பிறகு ஐ.சி.எப். பகுதிக்கு சென்று மக்களை சந்தித்தார்.

அங்கு போட்டியிடும் மத்திய சென்னை தொகுதி வேட்பாளர் தயாநிதி மாறனுடன் திறந்த ஜீப்பில் நின்றபடி பொதுமக்களை பார்த்து ஆதரவு திரட்டினார். சாலையின் இருபுறமும் ஏராளமானோர் திரண்டு நின்று முதலமைச்சரை பார்த்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக கையசைத்தனர். ரோட்டின் இருபுறமும் வழி நெடுக தி.மு.க. கொடி, வாழை தோரணம் என அப்பகுதியே விழாக்கோலமாக காட்சி அளித்தது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசார ஏற்பாடுகளை இன்று மாவட்ட கழக செயலாளர் அமைச்சர் பி.கே.சேகர்பாபு சிறப்பாக செய்திருந்தார்.

Tags:    

Similar News