தமிழ்நாடு

சென்னையில் நூதன முறையில் கைவரிசை: வயதானவர்களை குறிவைத்து ஆன்லைன் மோசடி

Published On 2024-02-27 06:21 GMT   |   Update On 2024-02-27 06:21 GMT
  • உலர் பழங்களை ஆர்டர் செய்தபோதும், பாலிசி எடுத்து தருவதாக கூறியும் ரூ.2½ லட்சம் சுருட்டல்.
  • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சென்னை:

சென்னையில் வயதான முதியவர்களை குறி வைத்து ஆன்லைன் வாயிலாக 2 பேரிடம் நூதன முறையில் மோசடி செய்யப்பட்டு உள்ளது.

சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்த ஜெ.எல்.என். சர்மா என்பவரிடம் குறிப்பிட்ட செல்போன் எண்ணில் இருந்து அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் பேசியவர் தனியார் வங்கி யின் இன்சூரன்ஸ் நிறுவனத் தில் இருந்து பேசுவதாக கூறியுள்ளார். நீங்கள் செலுத்தும் பாலிசி தொகை 45 நாட்களில் திருப்பி தரப்படும் என்று அவர் ஆசை காட்டியுள்ளார்.

இதனை நம்பி சர்மா, தனது வங்கி கணக்கில் இருந்து ரூ.1 லட்சம் பணம் அனுப்பியுள்ளார். பின்னர் மறுநாள் மனைவியின் வங்கி கணக்கில் இருந்தும் ரூ.1 லட்சம் பணத்தை அனுப்பி வைத்து உள்ளார்.

இதைத்தொடர்ந்து நுங்கம்பாக்கத்தில் உள்ள இன்சூரன்ஸ் நிறுவனத்தின் அலுவலகத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது, அப்படி எதுவும் நாங்கள் பேசவில்லையே? ஏன் பணத்தை அனுப்பினீர்கள்? என்று கேட்டுள்ளனர்.

இதன்பிறகே சர்மா தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்துள்ளார். இதுபற்றி சூளைமேடு போலீசில் அவர் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதேபோன்று ராஜா அண்ணாமலைபுரம் எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்த 70 வயதான ஜெயஸ்ரீ என்பவர் ஆன்லைனில் உலர் பழங்களை ஆர்டர் செய்துள்ளார்.

ஆனால் ஆர்டர் செய்ய முடியாமல் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜெயஸ்ரீ பயன்படுத்தி வந்த கிரெடிட் கார்டில் இருந்து 6 முறை தலா ரூ.10 ஆயிரம் பணம் எடுக்கப்பட்டுள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவரும் இதுபற்றி போலீசில் புகார் அளித்துள்ளார். இதன்பேரில் போலீசார் வழக்க பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதுபற்றி போலீசார் கூறும்போது, "அறிமுகம் இல்லாத நபர்கள் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினால் அவர்களிடம் எச்சரிக்கையோடு பேச வேண்டும். இல்லையென்றால் இதுபோன்று இழப்புகளை சந்திக்க நேரிடும்" என்று எச்சரித்துள்ளனர்.

Tags:    

Similar News