தமிழ்நாடு

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு: முன்னாள் அமைச்சர் பரமசிவம் மனைவிக்கு சிறை தண்டனை

Published On 2023-11-20 08:26 GMT   |   Update On 2023-11-20 08:26 GMT
  • ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்தவர் அ.ம.பரமசிவம்.
  • கடந்த 2015-ம் ஆண்டு முன்னாள் அமைச்சர் பரமசிவம் மரணம் அடைந்தார்.

சென்னை:

தமிழ்நாட்டில் 1991-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்தவர் அ.ம.பரமசிவம்.

இவரும், இவரது மனைவி நல்லம்மாளும் வருமானத்துக்கு அதிகமாக சுமார் ரூ.38 லட்சத்துக்கு சொத்துச் சேர்த்ததாக 1997-ம் ஆண்டு தி.மு.க., ஆட்சிக்காலத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சிறப்பு கோர்ட்டு, பரமசிவத்துக்கு 2 ஆண்டு, அவரது மனைவி நல்லம்மாளுக்கு ஓராண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் கடந்த 2000-ம் ஆண்டு பரமசிவம் நல்லம்மாள் ஆகியோர் மேல்முறையீடு செய்தனர்.

இந்த வழக்கு சுமார் 23 ஆண்டுகளாக ஐகோர்ட்டில் நிலுவையில் இருந்து வந்தது. இதற்கிடையில் கடந்த 2015-ம் ஆண்டு முன்னாள் அமைச்சர் பரமசிவம் மரணம் அடைந்தார். இதையடுத்து இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கீழ் கோர்ட்டு வழங்கிய தண்டனையை உறுதி செய்தார். மேலும் இவர்கள் மீது வருமானத்துக்கு அதிகமாக 417 சதவீதம் சொத்து சேர்த்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எனவே இவர்களை விடுதலை செய்ய முடியாது. இந்த ஓராண்டு சிறை தண்டனையை நல்லம்மாள் அனுபவிக்க வேண்டும்.

இதற்கு முன்பு அவர் விசாரணை கைதியாக சிறையில் அடைக்கப்பட்டு இருந்தால் அந்த காலத்தை தண்டனையில் இருந்து கழிக்க வேண்டும். மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்கிறேன் என்று நீதிபதி கூறியுள்ளார்.

Tags:    

Similar News