தமிழ்நாடு செய்திகள்

எனது செல்போனை ஒட்டு கேட்கிறார்கள்: அண்ணாமலை குற்றச்சாட்டு

Published On 2024-04-12 08:34 IST   |   Update On 2024-04-12 08:34:00 IST
  • தி.மு.க.வுக்கும், பா.ஜனதாவுக்கும் இடையேதான் போட்டி. அதனால்தான் தி.மு.க.வை பிரதமர் குற்றம் சாட்டுகிறார்.
  • தமிழ்நாட்டில் பிரிவினைவாதம் பேசும் சக்திகளை அடக்குவோம், குடும்ப ஆட்சியை ஒழிப்போம் என பிரதமர் கியாரண்டி தருகிறார்.

கோவை:

கோவை பாராளுமன்ற தொகுதியில் பா.ஜனதா கட்சி சார்பில் அந்த கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். அவர் நேற்று தாமரை சின்னத்திற்கு ஆதரவு கேட்டு கோவை தண்ணீர் பந்தல், மசக்காளிபாளையம் உள்ளிட்ட இடங்களில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வாகன பேரணி சென்றால் ஓட்டு கிடைக்குமா என்றும், பேட்டி அளிப்பதையே ஒருவர் வாடிக்கையாக வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அவர் வாகன பேரணி போனால் எவ்வளவு கூட்டம் வருகிறது என்று பார்ப்போம்.

நாங்கள் வாகன பேரணியை வெறும் ஷோவாக கருதவில்லை. அதை நாங்கள் மக்கள் தரிசன யாத்திரையாக கருதுகிறோம். எங்கள் தலைவர்கள் மக்களை நேரில் சந்தித்து அவர்களின் ஆசியை பெற்று வருகின்றனர். பிரதமர் மக்களை பார்க்க வருகிறார். மக்கள் பிரதமரை பார்க்க வருகிறார்கள்.

தி.மு.க.வுக்கும், பா.ஜனதாவுக்கும் இடையேதான் போட்டி. அதனால்தான் தி.மு.க.வை பிரதமர் குற்றம் சாட்டுகிறார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் கேட்கும் கேள்விகளுக்கு மோடி கியாரண்டி தருவாரா? என்று கேட்கிறார். அதற்கு நான் சொல்கிறேன். 2024 தேர்தலுக்கு பின் ஊழல் செய்தவர்கள் சிறையில் இருப்பார்கள் என்று பிரதமர் மோடி கியாரண்டி தருகிறார். 8½ கோடி தமிழக மக்களையும் தி.மு.க. என்ற தீய சக்தியிடம் இருந்து காப்பாற்றுவோம் என்றும், தமிழ்நாட்டை டாஸ்மாக்கில் இருந்து காப்பாற்றுவோம் என்றும் மோடி கியாரண்டி தருகிறார்.

தமிழ்நாட்டில் பிரிவினைவாதம் பேசும் சக்திகளை அடக்குவோம், குடும்ப ஆட்சியை ஒழிப்போம் என பிரதமர் கியாரண்டி தருகிறார். பா.ஜனதா மேல்தட்டு மக்கள் கட்சி, வடமாநில கட்சி என தமிழக மக்களிடம் திராவிட கட்சிகள் ஒரு பிம்பத்தை உருவாக்கி உள்ளனர். இந்த பிம்பம் எல்லாம் உடைய போகிறது.

அமைச்சர் உதயநிதி பிரசாரத்தின்போது ஒரு குழந்தைக்கு 'ரோலக்ஸ்' என்று பெயர் வைத்துள்ளார். கமல்ஹாசன் நடித்த விக்ரம் படத்தில் போதைக்கடத்தல் கும்பல் தலைவனாக வரும் கதாபாத்திரத்தின் பெயர்தான் ரோலக்ஸ். அந்த பெயரை குழந்தைக்கு சூட்டலாமா?

ஐதராபாத்தில் செல்போன் ஒட்டு கேட்கப்பட்ட விவகாரத்தில் 4 போலீஸ் அதிகாரிகள் சிறைக்கு சென்றுள்ளனர். அதேபோன்ற நிலைமை தமிழகத்தில் காணப்படுகிறது.

என்னையும், எனது குடும்பத்தினரையும் கண்காணித்து தகவல் அளிக்க ஒரு குழு கோவையில் செயல்பட்டு வருகிறது. எனது செல்போனை உளவுத்துறை போலீசார் ஒட்டு கேட்கின்றனர். என் மனைவி, என் சகோதரி மற்றும் குடும்ப உறுப்பினர்களின் செல்போன்களை ஒட்டு கேட்கின்றனர். இது ஒரு அமைச்சருக்கும், சிறையில் உள்ள செந்தில்பாலாஜிக்கும் பரிமாறப்படுகிறது. தேர்தல் முடிவுகள் வந்த பின்னர் காட்சிகள் மாறும். எனது செல்போனை ஒட்டு கேட்கும் எத்தனை உளவுத்துறை அதிகாரிகள் சிறைக்கு செல்கிறார்கள் என பாருங்கள். தி.மு.க. ஆட்சி நிரந்தரமாக இருக்க போவதில்லை.

கொங்கு மண்டலம் தங்களது கோட்டை என திராவிட கட்சிகள் சொல்லி வருகின்றன. ஜூன் 4-ந் தேதி கொங்கு மண்டலம் யாருடைய கோட்டை என்பது தெரிந்து விடும். திராவிட கட்சிகளின் இந்த பிம்பம் உடைந்து போய்விடும்.

மீண்டும் மத்தியில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் தேர்தல் முறையே இருக்காது என்று கூறுவது சரியல்ல. அப்படியென்றால் 2014 மற்றும் 2019-க்கு பின்னர் தேர்தல் நடைபெறவே இல்லையா.

ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது தான் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் எண்ணமும் கூட. மோடி அதை நிறைவேற்றும்போது கருணாநிதியின் ஆசி விண்ணில் இருந்து மோடிக்கு கண்டிப்பாக கிடைக்கும்.

இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

Tags:    

Similar News