தமிழ்நாடு

தென்காசியில் நாளை மதியம் அமித்ஷா "ரோடு-ஷோ"

Published On 2024-04-04 06:42 GMT   |   Update On 2024-04-04 06:42 GMT
  • மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நாளை பிரசாரத்திற்காக தென்காசி வருகிறார்.
  • அமித்ஷா வருகையையொட்டி பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர்.

தென்காசி:

தமிழகத்தில் வருகிற 19-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதனையொட்டி அரசியல் கட்சியினரின் பிரசாரம் சூடு பிடித்துள்ளது.

பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக பிரதமர் மோடி தமிழகத்தில் ஏற்கனவே பிரசாரம் செய்துள்ள நிலையில் அடுத்த வாரமும் பிரசாரம் செய்ய உள்ளார்.

இந்நிலையில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நாளை (வெள்ளிக்கிழமை) பிரசாரத்திற்காக தென்காசி வருகிறார். இதற்காக நாளை சிவகங்கை தொகுதியில் பிரசாரத்தை முடித்துவிட்டு மதியம் ஹெலிகாப்டரில் தென்காசி வருகிறார்.

தென்காசி மாவட்டம் இலஞ்சியில் உள்ள ராமசாமி பிள்ளை பள்ளி வளாகத்திற்கு நாளை மதியம் 12.30 மணிக்கு வந்து இறங்கும் அமித்ஷா அங்கிருந்து நேரடியாக காரில் பிரசாரத்திற்கு புறப்படுகிறார்.

தென்காசி மத்தளம் பாறை விலக்கு பகுதியான ஆசாத் நகர் பகுதியில் இருந்து திறந்த வாகனத்தில் நின்றபடி பிரசாரத்தை தொடங்கும் அமித்ஷா அங்கிருந்து பழைய பஸ் நிலையம் வரையிலும் சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு திறந்த வாகனத்தில் ஊர்வலமாக சென்று பா.ஜனதாவுக்கு ஆதரவு திரட்டுகிறார்.

அதன்பின் நிகழ்ச்சியை முடித்துவிட்டு மதியம் 1.15 மணிக்கு காரில் மீண்டும் ஹெலிபேடு சென்று கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தேர்தல் பிரசாரத்திற்காக அதே ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு செல்கிறார்.

முதலில் அவர் சுமார் 5 கிலோமீட்டர் தூரம் அதாவது ஆசாத் நகர் தொடங்கி புதிய பஸ் நிலையம் வரையிலும் 'ரோடு-ஷோ' நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்து வந்த நிலையில், போக்குவரத்து நெருக்கடி காரணமாக 2 கிலோமீட்டராக குறைக்கப்பட்டு உள்ளது.

சுமார் 45 நிமிடங்கள் மட்டுமே அவர் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். அவரது வருகையையொட்டி பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர்.

இதற்கிடையே உள்துறை மந்திரி அமித்ஷா வருகையை ஒட்டி தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் தலைமையில் தென்காசி நகர் பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அமித்ஷா வந்திறங்கும் பள்ளி மைதானத்தில் உள்ள ஹெலிபேடு தளத்தில் கூடுதலாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அமித்ஷா 'ரோடு-ஷோ' செல்லும் சாலையிலும் போலீசார் ரோந்து வாகனங்களில் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News