தமிழ்நாடு

அனல் பறந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவு... 26 காளைகளை அடக்கிய அபி சித்தருக்கு கார் பரிசு

Published On 2023-01-17 12:12 GMT   |   Update On 2023-01-17 12:12 GMT
  • சிறந்த காளையின் உமையாளர் புதுக்கோட்டை தமிழ்ச்செல்வனுக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது.
  • ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரர்கள், மாடுகளின் உரிமையாளர்கள் என மொத்தம் 53 பேர் காயமடைந்தனர்

மதுரை:

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று வழக்கமான உற்சாகத்துடன் நடைபெற்றது. ஜல்லிக்கட்டு போட்டியை தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். வாடிவாசல் வழியாக சீறிப் பாய்ந்த காளைகளை, மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். காளையர்களின் பிடியில் சிக்காமல் பெரும்பாலான காளைகள் கெத்து காட்டின. காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் தங்க மோதிரம், தங்க காசு உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன.

விறுவிறுப்பாக மொத்தம் 10 சுற்றுகளாக நடந்த ஜல்லிக்கட்டு போட்டி மாலை 5 மணியளவில் நிறைவடைந்தது. மொத்தம் 823 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. இதில், அபி சித்தர் என்ற மாடுபிடி வீரர் 26 காளைகளை அடக்கி முதலிடம் பெற்றார். சிறந்த மாடுபிடி வீரராக தேர்ந்தெடுக்கப்பட்ட அவருக்கு முதலமைச்சர் சார்பில் கார் பரிசாக வழங்கப்பட்டது.

20 காளைகளை அடக்கிய ஏனாதி அஜய் என்பவர் இரண்டாம் பரிசும், 12 காளைகளை அடக்கிய அலங்காநல்லூர் ரஞ்சித் மூன்றாம் பரிசும் பெற்றனர். 

புதுக்கோட்டை மாவட்டம் கைக்குறிச்சியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவரின் காளை சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்டது. அவருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் கார் பரிசாக வழங்கப்பட்டது.

இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரர்கள், மாடுகளின் உரிமையாளர்கள் என மொத்தம் 53 பேர் காயமடைந்தனர். ஜல்லிக்கட்டை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

Tags:    

Similar News