தமிழ்நாடு

12 ஆண்டுகளுக்கு பின் கணவர், மகனை சந்தித்த ராணி.

12 ஆண்டுகளுக்கு பிறகு குடும்பத்தினருடன் சேர்ந்த செங்கல்பட்டு பெண்- நீண்ட நாள் கழித்து பார்த்த மகிழ்ச்சியில் குடும்பத்தினர்

Update: 2023-06-08 10:11 GMT
  • உடனடியாக தனது தாயை பார்க்க வேண்டும் என்ற ஆசையில் தந்தை முனுசாமியை அழைத்து கொண்டு இளவரசன் கோவைக்கு வந்தார்.
  • உதவும் கரங்கள் அமைப்பின் உதவியால் எனது மனைவி குணம் அடைந்து இருக்கிறார். அவர்களுக்கு நன்றிகள் சொல்ல வார்த்தையே இல்லை.

கோவை:

செங்கல்பட்டை சேர்ந்தவர் முனுசாமி. இவரது மனைவி ராணி. இவர்களுக்கு இளவரசன், நரசிம்மராஜ் என 2 மகன்கள் உள்ளனர்.

ராணி சற்று மனநலம் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் அவரை குடும்பத்தினர் ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த 2011-ம் ஆண்டு, ராணி திடீரென மாயமானார்.

அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் அவரை தேடி பார்த்தனர். ஆனாலும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதையடுத்து போலீசிலும் ராணியை கண்டுபிடித்து தரகோரி அவரது குடும்பத்தினர் புகார் அளித்தனர். போலீசார் மாயமான ராணியை தேடி பார்த்தும் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

மாயமாகி 12 ஆண்டுகள் ஆகிவிட்டதால் அவர் உயிரோடு இருக்க வாய்ப்பில்லை என்றே உறவினர்கள் நினைத்திருந்தனர். இருந்த போதிலும் முனுசாமியும், அவர்களது மகன்களும் ராணி உயிரோடு தான் இருப்பார்.

என்றாவது ஒருநாள் தங்களை தேடி வருவார் என நினைத்து காத்திருந்தனர். அவர்களின் காத்திருப்பு வீண்போகவில்லை. அவர்கள் நினைத்தது போலவே ராணி உயிரோடு தான் இருந்தார்.

சம்பவத்தன்று முனுசாமி மகன் இளவரசனுக்கு ஒரு போன் அழைப்பு வந்தது. அதில் நாங்கள் கோவை மாவட்டம் மயிலேறிபாளையத்தில் உள்ள உதவும் கரங்கள் அமைப்பில் இருந்து பேசுகிறோம். உங்கள் தாய் கடந்த 2014-ம் ஆண்டு கோவையில் சுற்றி திரிந்தபோது, அவரை மீட்டு நாங்கள் மனநல சிகிச்சை அளித்தோம்.

குணம் அடைந்த அவரிடம் விசாரித்தபோது உங்கள் பெயரை தெரிவித்து, உங்களை சந்தித்து, உங்களுடன் செல்ல விரும்புகிறார் என்ற தகவலை தெரிவித்தனர்.

மாயமான தனது தாய் இருக்கும் இடத்தை அறிந்ததும் இளவரசன் மகிழ்ச்சி அடைந்தார். உடனடியாக தனது தாயை பார்க்க வேண்டும் என்ற ஆசையில் தந்தை முனுசாமியை அழைத்து கொண்டு இளவரசன் கோவைக்கு வந்தார்.

நேராக அந்த மையத்திற்கு சென்ற 2 பேரும், ராணி குணம் அடைந்து நல்ல நிலையில் இருப்பதை பார்த்தனர். 12 ஆண்டுகளுக்கு பிறகு ராணியை பார்த்த சந்தோஷத்தில் முனுசாமியும், அவரது மகனும் அவரை கட்டிப்பிடித்து கதறி அழுதனர்.

மேலும் தன் மனைவிக்கு உண்ண உணவு, தங்க இடம் கொடுத்தது மட்டுமின்றி மனநல சிகிச்சை அளித்த உதவும் கரங்கள் அமைப்புக்கு முனுசாமி கண்ணீர் மல்க தனது நன்றியை தெரிவித்து கொண்டார்.

இதுகுறித்து ராணியின் கணவர் முனுசாமி கூறியதாவது:-

12 வருடங்களுக்கு முன்பு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற போது ராணி திடீரென காணாமல் போய்விட்டார்.

பல இடங்களில் தேடியும், போலீசில் புகார் அளித்தும் கிடைக்காததால் மிகவும் வருத்தத்தில் இருந்தோம்.

தற்போது உதவும் கரங்கள் அமைப்பின் உதவியால் எனது மனைவி குணம் அடைந்து இருக்கிறார். அவர்களுக்கு நன்றிகள் சொல்ல வார்த்தையே இல்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பின்னர் ராணி அங்கிருந்த நிர்வாகிகள் மற்றும் ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்து விட்டு தனது கணவர் மற்றும் மகனுடன் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றார்.

Tags:    

Similar News