தமிழ்நாடு

கோவையில் நடந்த அ.தி.மு.க ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்களை காணலாம்

தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

Published On 2024-02-01 06:42 GMT   |   Update On 2024-02-01 06:42 GMT
  • பட்டியலின பெண் தாக்கப்பட்ட விவகாரத்தில் எம்.எல்.ஏ. மகன், மருமகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
  • போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், தி.மு.க அரசுக்கு எதிராகவும், அரசை கண்டித்தும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

கோவை:

கோவை மாவட்ட ஒருங்கிணைந்த அ.தி.மு.க. சார்பில், தி.மு.க. அரசை கண்டித்து இன்று கோவையில் 3 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீர்கேட்டை கண்டிப்பதாகவும், பட்டியலின பெண் தாக்கப்பட்ட விவகாரத்தில் எம்.எல்.ஏ. மகன், மருமகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டியும், கோவை மாவட்டத்தை தமிழக அரசு தொடர்ந்து புறக்கணிப்பதாகவும், தி.மு.க. அரசை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி தலைமை தாங்கினார். பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். இதில் புறநகர் மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் இருந்து அ.தி.மு.க பகுதி, பேரூர், வார்டு செயலாளர்கள், முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், தி.மு.க அரசுக்கு எதிராகவும், அரசை கண்டித்தும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இதேபோல் கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர் மாவட்ட செயலாளர் அம்மன் அர்ச்சுணன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். இதில் கே.ஆர்.ஜெயராம் எம்.எல்.ஏ. உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் பங்கேற்பதற்காக காலையில் இருந்தே அ.தி.மு.க.வினர், அ.தி.மு.க. அலுவலகமான இதய தெய்வம் மாளிகையில் குவிந்திருந்தனர். பின்னர் அவர்கள், அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு செஞ்சிலுவை சங்கம் முன்பு வந்தனர்.

தொடர்ந்து தி.மு.க. அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் மாநகர் மாவட்டத்தை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள், பகுதி, வார்டு, பேரூர், செயலாளர்கள், தொண்டர்கள், மகளிர் அணியினர், சார்பு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தையொட்டி அந்த பகுதியில் வாகன போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டிருந்தது. போராட்டம் நடைபெறும் இடத்தில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

கோவை புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மேட்டுப்பாளையம் பஸ் நிலையம் அருகே இன்று மாலை 3 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

ஆர்ப்பாட்டத்திற்கு புறநகர் வடக்கு மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான பி.ஆர்.ஜி.அருண்குமார் தலைமை தாங்குகிறார். இதில் மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ. ஏ.கே. செல்வராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. ஓ.கே.சின்னராஜ் மற்றும் கட்சியினர் கலந்து கொள்கின்றனர்.

Tags:    

Similar News