மத்தூர் அருகே விபத்து: வாகனம் மோதி பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் உயிரிழப்பு
- இருவரும் ஊத்தங்கரையில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி நடைபெற்ற ஆடல், பாடல் நிகழ்ச்சியை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றனர்.
- காயமடைந்த மைந்தன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே மணியாண்டஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த குடியப்பன். இவரது மகன் மைந்தன் (வயது18). அதே பகுதியைச் சேர்ந்தவர் வேடியப்பன். இவரது மகன் ஆதி (18).
நண்பர்களான மைந்தனும், ஆதியும் போச்சம்பள்ளியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தனர்.
இந்த நிலையில் இருவரும் நேற்று ஊத்தங்கரையில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி நடைபெற்ற ஆடல், பாடல் நிகழ்ச்சியை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றனர். மீண்டும் இரவு மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பி வந்தனர். அப்போது அவர்கள் மத்தூர் தேசிய நெடுஞ்சாலை அந்தேரிபள்ளி அருகே வந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மைந்தன் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர்.
இதில் தலையில் காயமடைந்த மைந்தன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். உயிருக்கு போராடி கொண்டிருந்த ஆதியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து தகவலறிந்த மத்தூர் போலீசார் உடனே அங்கு விரைந்து வந்து மைந்தனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய அடையாளம் தெரியாத வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.