ஏலகிரி அருகே அரசு பஸ் மோதி 3 வயது குழந்தை உயிரிழப்பு
- ஏலகிரி அடுத்துள்ள எள்ளுகுளி பகுதியில் செல்லும்போது முன்னாள் சென்ற அரசு பேருந்தை முந்தி செல்ல முயன்றுள்ளனர்.
- அரசு பேருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் மோதியதில் குழந்தை பிரித்திகா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
தொப்பூர்:
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள ஈச்சம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மூர்த்தி-ஆர்த்தி தம்பதியினருக்கு 3 வயதில் பிரித்திகா என்ற பெண் குழந்தை உள்ளது.
நேற்று இரவு ஈச்சம்பட்டியில் இருந்து நாகாவதி அணை நோக்கி மூர்த்தி மற்றும் அவரது மனைவி குழந்தை உடன் அவரது உறவினர் தசரதன் என்பவர் இருசக்கர வாகனத்தை ஓட்டி செல்ல பின்னால் அமர்ந்து சென்றுள்ளனர்.
அப்போது ஏலகிரி அடுத்துள்ள எள்ளுகுளி பகுதியில் செல்லும்போது முன்னாள் சென்ற அரசு பேருந்தை முந்தி செல்ல முயன்றுள்ளனர். பேருந்தை முந்தி சென்றவுடன் பதற்றத்தில் கையில் இருந்த குழந்தை தவறி சாலையில் விழுந்ததாக கூறப்படுகிறது.
அப்போது பின்னால் வந்த அரசு பேருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் மோதியதில் குழந்தை பிரித்திகா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் . இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் மற்றும் அவரது உறவினர்கள் அரசு பேருந்தின் கண்ணாடியை உடைத்தாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து வந்த தொப்பூர் காவல்துறையினர் குழந்தையின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் விபத்து குறித்து தொப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.