தமிழ்நாடு

தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 6 வயது சிறுவன் பலி- உறவினர்கள் போராட்டத்தால் பதற்றம்

Published On 2023-10-07 05:31 GMT   |   Update On 2023-10-07 05:31 GMT
  • தண்ணீர் தொட்டியை பார்த்த போது குகன்ராஜ் தண்ணீர் தொட்டிக்குள் மூச்சுபேச்சின்றி கிடந்தார்.
  • அஜாக்கிரதையாக செயல்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

வடவள்ளி:

கோவை வேடபட்டி சாலை நாகராஜபுரம் அன்னை சத்தியா நகரை சேர்ந்தவர் கார்த்திக். கட்டிடத் தொழிலாளி.

இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 6 வயதில் குகன்ராஜ் என்ற மகன் உள்ளார்.

குகன்ராஜ், அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று குகன்ராஜ் வீட்டில் இருந்தான். மதியம் தனது தாயிடம் விளையாட செல்வதாக கூறிவிட்டு வீட்டின் அருகே சென்று குகன்ராஜ் விளையாடி கொண்டிருந்தான்.

இந்நிலையில் விளையாட சென்ற சிறுவன் மாலை வெகுநேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வராததால், பெற்றோர் அதிர்ச்சியாகினர். அக்கம்பக்கத்தில் சிறுவனை தேடி பார்த்தனர். ஆனால் கிடைக்கவில்லை.

இவர்களது வீட்டின் அருகே ஆரம்ப பள்ளியின் சுற்றுச்சுவர் கட்டும் பணி நடந்து வருகிறது. இந்த பணிக்காக அங்கு தண்ணீர் தொட்டி ஒன்றை அமைத்து தண்ணீர் நிரப்பி உள்ளனர். இந்நிலையில் அந்த தண்ணீர் தொட்டியில் சிறுவன் ஒருவன் மூழ்கி கிடப்பதாக பரவிய தகவலை அடுத்து, அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அங்கு திரண்டனர். சிறுவனின் பெற்றோரும் அங்கு வந்தனர்.

அவர்கள் தண்ணீர் தொட்டியை பார்த்த போது குகன்ராஜ் தண்ணீர் தொட்டிக்குள் மூச்சுபேச்சின்றி கிடந்தார். இதை பார்த்ததும் அதிர்ச்சியான அவர்கள், சிறுவனை தூக்கி கொண்டு, தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள் சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதை கேட்டதும் அவரது பெற்றோர் கதறி அழுதனர். இது அங்கிருந்தவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் பள்ளி சுற்றுச்சுவரை கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் தண்ணீர் தொாட்டியை மூடாமல் சென்றதால் தான் குழந்தை இறந்ததாக கூறி சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அங்கு சென்று வாக்குவாதம் செய்தனர்.

மேலும் அஜாக்கிரததையாக செயல்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் பேரூர் டி.எஸ்.பி. ராஜபாண்டியன், தொண்டாமுத்தூர் இன்ஸ்பெக்டர் லெனின் அப்பாதுரை தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தொடர்ந்து அங்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்ப முயன்றனர்.

ஆனால் உறவினர்கள் உடலை எடுக்க விடமால், குழந்தை இறப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம் நடத்தினர். ஏராளமானோர் குவிந்ததால் பாதுகாப்புக்காக அங்கு அதிரடிப்படை போலீசாரும் குவிக்கப்பட்டனர்.

தொடர்ந்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனை தொடர்ந்து போலீசார் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக அசாம் மாநிலத்தை சேர்ந்த அபூபக்கர் (19), மாலிக் குஷ்தூர் (29), ஷேக் ஆஸ்குத்கொமல் (25), அஸருதுல் இஸ்லாம் (30) ஆகிய 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News