விபத்தில் சிக்கிய பேருந்து கவிழ்ந்து கிடக்கும் காட்சி.
திருமண கோஷ்டியினர் சென்ற பஸ் கவிழ்ந்து 52 பேர் காயம்- கர்ப்பிணி உள்ளிட்டோருக்கு தீவிர சிகிச்சை
- திடீரென்று கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில் தாறுமாறாக ஓடியது.
- டிரைவர் தூங்கியதால் விபத்து ஏற்பட்டதாக போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஜெயங்கொண்டம்:
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள கார்குடல் கிராமத்தை சேர்ந்த திருமண கோஷ்டியினர் அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே இன்று நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்பதற்காக இன்று அதிகாலை தனியார் பேருந்தில் வந்தனர். திருமண விழா முடிந்ததும் சாப்பிட்டு விட்டு, உடனடியாக அதே பேருந்தில் ஊருக்கு திரும்பிக்கொண்டு இருந்தனர்.
இந்நிலையில் அந்த பேருந்து, ஜெயங்கொண்டத்தை அடுத்த தேவனூர் பகுதியில் சென்று கொண்டிருந்தது. திடீரென்று கட்டுப்பாட்டை இழந்த அந்த பேருந்து சாலையில் தாறுமாறாக ஓடியது.
இதனால் பஸ்சுக்குள் இருந்தவர்கள் அபயகுரல் எழுப்பினர். அப்போது திடீரென்று அந்த பஸ் சாலையோரம் கவிழ்ந்தது. இதில் பஸ்சுக்குள் சிக்கிக்கொண்டவர்கள் பலத்த காயங்களுடன் போராடினர்.
பஸ் கவிழ்ந்தது தகவல் அறிந்ததும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் திரண்டு ஓடிவந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் விபத்து பகுதிக்கு 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் விரைந்து வந்தன. பேருந்தில் பயணம் செய்த 52 பேரும் பலத்த காயம் அடைந்தனர். குறிப்பாக கர்ப்பிணி ஒருவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு வலியால் துடித்தார். அவர்கள் அனைவரும் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த விபத்து குறித்து ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய பஸ் டிரைவரை தேடி வருகிறார்கள். டிரைவர் தூங்கியதால் விபத்து ஏற்பட்டதாக போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.