தேனி மாவட்டத்தில் அண்ணாமலை இன்று முதல் 3 நாட்கள் சுற்றுப்பயணம்
- இன்று முதல் வருகிற 9-ந் தேதி வரை 3 நாட்கள் தேனி மாவட்டத்துக்குட்பட்ட 4 சட்டமன்ற தொகுதிகளிலும் நடைபயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்கிறார்.
- 9-ந் தேதி காலை 8 மணி முதல் பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நடைபயணம் செய்கிறார்.
ஆண்டிபட்டி:
என் மண் என் மக்கள் என்ற பிரசாரத்தை வலியுறுத்தி பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நடைபயணம் செய்கிறார். 2-ம் கட்ட நடைபயணத்தை ஆலங்குளத்தில் தொடங்கிய அவர் நேற்று ராஜபாளையம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார்.
இந்நிலையில் இன்று முதல் வருகிற 9-ந் தேதி வரை 3 நாட்கள் தேனி மாவட்டத்துக்குட்பட்ட 4 சட்டமன்ற தொகுதிகளிலும் நடைபயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்கிறார். இன்று மாலை 6 மணிக்கு தேனி மாவட்டம் ஆண்டிபட்டிக்கு வருகை தருகிறார். அங்கிருந்து பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் அண்ணாமலை நாளை காலை கடமலைக்குண்டு, துரைசாமிபுரம் ஆகிய பகுதிகளில் நடைபயணம் செய்கிறார்.
மாலை 3 மணி முதல் கம்பம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளிலும் 6 மணி முதல் போடி சட்டமன்ற தொகுதியிலும் நடைபயணம் மேற்கொள்கிறார். 9-ந் தேதி காலை 8 மணி முதல் பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நடைபயணம் செய்கிறார்.
அவரது வருகையை முன்னிட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
அண்ணாமலை தேனி மாவட்டத்துக்கு வருகை தருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு சில அமைப்புகள் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர். இதனைத் தொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்து போலீஸ் நிலையத்தில் வைத்துள்ளனர்.