தமிழ்நாடு செய்திகள்
பழவேற்காடு

இஸ்ரோ மையத்தில் ‘ககன்யான்’ திட்ட சோதனை: பழவேற்காட்டில் வீடுகளில் ‘திடீர்’ அதிர்வு

Published On 2022-05-13 12:33 IST   |   Update On 2022-05-13 12:33:00 IST
பழவேற்காடு பகுதியில் இன்று காலை 7.30 மணி அளவில் திடீரென மிகப்பெரிய வெடி சத்தம் கேட்டது. மேலும் வீடுகள் அதிர்ந்தது போன்று பொதுமக்கள் உணர்ந்தனர்.
பொன்னேரி:

பழவேற்காடு பகுதியானது ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவை ஒட்டி சுமார் 20 கி.மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ மையத்தில் இருந்து ஏவப்படும் செயற்கைக்கோள்கள் மேலே செல்லும் போது பழவேற்காடு பகுதியில் இருந்து பொதுமக்களால் தெளிவாக பார்க்க முடியும்.

இந்த நிலையில் பழவேற்காடு பகுதியில் இன்று காலை 7.30 மணி அளவில் திடீரென மிகப்பெரிய வெடி சத்தம் கேட்டது. மேலும் வீடுகள் அதிர்ந்தது போன்று பொதுமக்கள் உணர்ந்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த வீட்டில் இருந்தவர்கள் அலறியடித்து வெளியே வந்தனர். வீடுகள் அதிர்வு குறித்து குழப்பம் அடைந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்ததும் அதிகாரிகள் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ மையத்தில் ககன்யான் திட்டத்திற்காக என்ஜின் சோதனை செய்த போது ஏற்பட்ட சத்தத்தால் பழவேற்காடு பகுதியில் அதிர்வு உணரப்பட்டது தெரிய வந்தது.

இதுகுறித்து பொன்னேரி தாசில்தார் ரஜினிகாந்த் கூறும்போது, பழவேற்காடு கிராமத்தில் இன்று காலை 7.30 மணியளவில் பயங்கர சத்தம் கேட்டதாகவும் வீடுகளில் அதிர்வு ஏற்பட்டதாகவும் கிராம மக்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக விசாரணை செய்தபோது ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் ககன்யான் திட்டத்திற்காக ஆராய்ச்சி நடைபெற்ற போது ஏற்பட்ட சத்தத்தால் அதிர்வு உணரப்பட்டு உள்ளது. நில அதிர்வு எதுவும் இல்லை. பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்றார்.

Similar News