தமிழ்நாடு செய்திகள்
ரஷிய படை

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 27 பேர் உக்ரைனில் தவிப்பு

Published On 2022-02-27 11:04 IST   |   Update On 2022-02-27 11:04:00 IST
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 27 பேர் உக்ரைன் நாட்டில் சிக்கி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது . அவர்களது விவரங்கள் சேகரிக்கப்பட்டு தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை:

உக்ரைன், ரஷியா போர் தீவிரமடைந்து வருகிறது. உக்ரைன் நாட்டில் மருத்துவப் படிப்புக்கு சென்ற இந்திய மாணவர்கள் மற்றும் புலம் பெயர்ந்தவர்கள் உணவு, தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

அவர்களை மீட்கும் முயற்சியில் இந்திய அரசும், தமிழக அரசும் நடவடிக்கை எடுத்துள்ளது.

முதற்கட்டமாக உக்ரைன் நாட்டில் சிக்கியுள்ள தமிழர்களின் விவரங்கள் சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் கலெக்டரின் நேர்முக உதவியாளரை (பொது) தொடர்பு அலுவலராக தமிழக அரசு நியமித்துள்ளது. அதன்படி திருவண்ணாமலை மாவட்ட கலெக்டரின் அலுவலராக நேர்முக உதவியாளர் (பொது) கணேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.

உக்ரைன் நாட்டில் சிக்கியுள்ள திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர்களின் விவரத்தை அவர் சேகரித்து வருகிறார்.

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 27 பேர் உக்ரைன் நாட்டில் சிக்கி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது . அவர்களது விவரங்கள் சேகரிக்கப்பட்டு தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த விவரங்களை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்து திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர்களை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

மேலும் உக்ரைன் நாட்டில் சிக்கியுள்ளவர்களின் விவரங்களை 9445008158 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்றார்.

Similar News