தமிழ்நாடு செய்திகள்
வேலூரில் பிளஸ்-1 மாணவியை கொன்று காதலன் தற்கொலை
வேலூர் அருகே வீட்டில் காதல் ஜோடி பிணமாக கிடந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்:
வேலூர் வள்ளலார் சவூத் அவென்யூ சாலையை சேர்ந்தவர் பாரதிதாசன். ராணிப்பேட்டை ஷூ கம்பெனியில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி தீபலட்சுமி. இவரும் வேறொரு ஷூ கம்பெனியில் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 2 மகள்கள் இருந்த நிலையில் இளைய மகள் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிறு வயதிலேயே இறந்தார்.
16 வயதான மூத்த மகள் வள்ளலார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். மாணவியின் பாட்டி கருகம்பத்தூர் மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வருகிறார்.
இதனால் மாணவி அடிக்கடி பாட்டி வீட்டுக்கு சென்று வந்தார். அப்போது அதேபகுதியை சேர்ந்த ராம்குமார் ( 22) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் காதலாக மாறி கடந்த 3 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
மாணவியின் பெற்றோர் காலை 8 மணிக்கே வேலைக்கு சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்புவார்கள். அவ்வாறு நேற்று மாலை 5.30 மணிக்கு வீடு திரும்பியபோது வீட்டின் கதவு திறந்த நிலையில் இருந்தது.
தொடர்ந்து உள்ளேசென்று பார்த்த போது மாணவி தரையில் பிணமாக கிடந்தார். ராம்குமார் தூக்கில் பிணமாக தொங்கினார். இதைக்கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
அவர்களின் கதறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக சத்துவாச்சாரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் தடயவியல் நிபுணர்கள் அங்கு வர வைக்கப்பட்டனர்.
சத்துவாச்சாரி போலீசார் மாணவி மற்றும் ராம்குமார் உடலை மீட்டு பிரேத பரி சோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் பொன்னியம்மன் மேலகுப்பம் கோவில் தெருவை சேர்ந்த பாரதிதாசன், தனது மகளின் படிப்புக்காக இங்கு குடும்பத்துடன் குடிபெயர்ந்துள்ளார். மாணவி அடிக்கடி கருகம்பத்தூரில் உள்ள பாட்டி வீட்டுக் செல்வது வழக்கம்.
அப்போது அதே தெருவில் வசித்து வந்த ராம்குமாருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 3 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் மாணவியின் பெற்றோருக்கு இவர்களின் காதல் விவகாரம் தெரிய வந்துள்ளது.
மாணவியின் பெற்றோர் ராம்குமார் வீட்டுக்கு சென்று பெற்றோரிடம் முறையிட்டு எச்சரித்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று காலை 9.30 மணிக்கு மாணவியை பார்க்க ராம்குமார் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது இருவருக்கும் ஏற்பட்ட தகராறு காரணமாக ராம்குமார், மாணவியின் கழுத்தை கயிறால் இறுக்கியுள்ளார். இதில் மாணவி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இதில் அதிர்ச்சியடைந்த ராம்குமார் அந்த கயிற்றிலேயே தூக்குமாட்டி தற்கொலை செய்துக் கொண்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையிலும், தடயவியல் நிபுணர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையிலும் தெரியவந்துள்ளது.
பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே மாணவியை கொலை செய்து ராம்குமார் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது இருவரும் சேர்ந்து தற்கொலை செய்து கொண்டார்களா என்பது தெரியவரும்.
இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.