தமிழ்நாடு செய்திகள்
ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
ஊட்டிக்கு கேரளாவில் இருந்து சுற்றுலா பயணிகள் வழக்கமாக அதிகம் பேர் வருகின்றனர்.
ஊட்டி
தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நேற்று நடைபெற்றது. இதையொட்டி நீலகிரி மாவட்ட எல்லையில் உள்ள சோதனைச்சாவடிகளில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அதன் பின்னரே வாகனங்கள் நீலகிரிக்குள் அனுமதிக்கப்பட்டது. ஊட்டிக்கு கேரளாவில் இருந்து சுற்றுலா பயணிகள் வழக்கமாக அதிகம் பேர் வருகின்றனர். மேலும் வெளி மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து வருகை தருகிறார்கள். இந்த நிலையில் நேற்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்த போதும், வார விடுமுறை நாளில் பொழுதை கழிக்கவும், குளு,குளு கால நிலை நிலவும் ஊட்டியில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து இருந்தது.
குறிப்பாக வெளிமாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் தங்களது சொந்த வாகனங்களில் வருகை தந்தனர். ஊட்டி தாவரவியல் பூங்காவில் நுழைவு வாயிலில் பூத்து குலுங்கிய மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். தொடர்ந்து பெரணி இல்லம், கண்ணாடி மாளிகைகளில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்த பெரணி செடிகள், மலர்கள், கள்ளி செடிகளை பார்வையிட்டனர். மலர்களுடன் கூடிய செல்பி ஸ்பாட் முன்பு சுற்றுலா பயணிகள் குடும்பத்தினருடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
பின்னர் பெரிய புல்வெளி மைதானத்தில் அமர்ந்து ஓய்வு எடுத்தனர்.நேற்று முன்தினம் ஊட்டி தாவரவியல் பூங்காவுக்கு 2859பேர் வருகை தந்தனர். கடந்த 12-ந் தேதி சனிக்கிழமை 6 ஆயிரத்து 944 பேரும், நேற்று 6500க்கும் மேற்பட்டோர் பூங்காவை கண்டு ரசித்தனர்.
தமிழகத்தில் உள்ள பிற மாவட்டங்களில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை மிகக்குறைவாக இருந்தது. ஆனால் வெளிமாநிலங்களில் இருந்து தான் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர். அதே போல் ஊட்டி ரோஜா பூங்கா. படகு இல்லம், தேயிலை பூங்கா, சூட்டிங் மட்டம், பைக்காரா படகு இல்லம், உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இன்றும் நீலகிரி மாவட்டத்தில் அதிக சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர்.