தமிழ்நாடு செய்திகள்
தமிழக கவர்னர் ஆர்என் ரவி

ஊட்டி ராஜ்பவன் மாளிகையில் எளிமையான முறையில் நடைபெறும் கவர்னர் ரவி மகள் திருமணம்

Published On 2022-02-19 11:50 IST   |   Update On 2022-02-19 13:40:00 IST
கவர்னர் வருகையை முன்னிட்டு ராஜ்பவன் மாளிகை, தாவரவியல் பூங்கா, உறவினர்கள் தங்க உள்ள தனியார் ஓட்டல்கள் என ஊட்டி முழுவதும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஊட்டி:

தமிழக கவர்னர் ஆர்.என். ரவியின் மகளுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. திருமணத்தை எளிமையான முறையில், அமைதியாக நடத்த கவர்னர் திட்டமிட்டார்.

இதனால் திருமணத்தை நடத்த இயற்கை எழில் கொஞ்சும் ஊட்டியை தேர்வு செய்தார். அதன்படி ஊட்டி தாவரவியல் பூங்கா அருகே உள்ள ராஜ்பவன் மாளிகையில் வருகிற 21 மற்றும் 22-ந்தேதிகளில் திருமண நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

இதையொட்டி கவர்னர் ரவி 7 நாள் பயணமாக நேற்று முன்தினம் நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு வந்தார். சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்து, அங்கிருந்து கார் மூலம் அவர் நீலகிரிக்கு சென்றார்.அவருடன் அவரது மனைவி, மற்றும் குடும்பத்தினர் அனைவரும் வந்துள்ளனர்.

இவர்கள் ஊட்டி ராஜ்பவன் மாளிகையில் தங்கி உள்ளனர். வருகிற 24-ந் தேதி வரை கவர்னர் ஊட்டியிலேயே தங்க உள்ளார்.

திருமணத்தை ஒட்டி ராஜ்பவன் மாளிகை முழுவதும் வர்ணம் பூசப்பட்டு, பொலிவு படுத்தப்பட்டுள்ளது. இதுதவிர மாளிகை முழுவதும் சுத்தப்படுத்தும் பணியும் நடந்து வருகிறது.

கொரோனா காலம் என்பதால் கவர்னரின் மகள் திருமணம் எந்தவித ஆடம்பரமும் இல்லாமல் மிகவும் எளிமையான முறையில் நடக்கிறது. இந்த திருமணத்தில் யார்? யார்? கலந்து கொள்கிறார்கள். எத்தனை பேர் பங்கேற்கிறார்கள்? என்ற எந்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.

இருப்பினும் இந்த திருமண நிகழ்வில் கவர்னர் குடும்பத்தினர் மற்றும் அவரது நெருங்கிய உறவினர்கள் மட்டுமே பங்கேற்பார்கள் என தெரிகிறது.

திருமண நிகழ்வில் பங்கேற்கும் உறவினர்களுக்காக ஊட்டியில் உள்ள 3 தனியார் ஓட்டல்கள் முழுவதுமாக முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருமணத்தில் பங்கேற்பதற்காக கவர்னின் உறவினர்கள் அனைவரும் நாளையே ஊட்டிக்கு வர உள்ளனர். அவர்கள் ஓட்டல்களில் தங்கி இருந்து திருமணத்தில் பங்கேற்கின்றனர்.

திருமணத்திற்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளும் ராஜ்பவன் மாளிகையில் மும்முரமாக நடந்து வருகிறது. இந்த பணிகளை கவர்னர் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் செய்து வருகிறார்கள்.

கவர்னர் வருகையை முன்னிட்டு ராஜ்பவன் மாளிகை, தாவரவியல் பூங்கா, உறவினர்கள் தங்க உள்ள தனியார் ஓட்டல்கள் என ஊட்டி முழுவதும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கவர்னர் ரவி, தனது மகளின் திருமண நிகழ்ச்சியை முடித்து கொண்டு, 24-ந் தேதி ஊட்டியில் இருந்து மீண்டும் சென்னை திரும்புகிறார்.



Similar News