தமிழ்நாடு செய்திகள்
தற்கொலை முயற்சி

தாய் தந்தை மீது கொலை வழக்குப்பதிவு: 2 மகள்கள் வி‌ஷம் குடித்து தற்கொலை முயற்சி

Published On 2022-01-07 12:12 IST   |   Update On 2022-01-07 12:12:00 IST
தாய், தந்தை, சகோதரர் மீது கொலை வழக்கு பதிவு செய்ததால் விரக்தியில் இருந்த 2 இளம்பெண்கள் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் காரைக்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காரைக்குடி:

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள கீழே ஊரணியை சேர்ந்தவர் கணேசன். இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செய்தி தொடர்பாளராக உள்ளார்.

இவரது மனைவி தேன்மொழி. இவர்களுக்கு நிஷாந்த் (21), என்ற மகனும் அஸ்மிதா (23), நிவேதா (20) என்ற 2 மகள்களும் உள்ளனர்.

நிஷாந்த் தேவகோட்டை பகுதியில் இறைச்சி கடை நடத்தி வருகிறார்.

கடந்த சில மாதங்களாக அமராவதிபுதூர் சமத்துவபுரத்தை சேர்ந்த குமார் என்ற ராஜ்குமார் (44) என்பவர் நிசாந்தை மிரட்டி பணம் பறித்து வந்துள்ளார்.அவரின் தொந்தரவு அதிகரிக்கவே நிஷாந்த் இதுகுறித்து தனது தந்தையிடம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து கணேசன் மற்றும் அவரது நண்பர் சுந்தரமூர்த்தி ஆகியோர் பணம் பறித்தது தொடர்பாக குமாரை கண்டித்துள்ளனர். இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த கணேசன் குமாரை கத்தியால் குத்தி கொலை செய்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக சோமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கணேசன், சுந்தர மூர்த்தியை கைது செய்தனர். தலைமறைவான நிஷாந்தை தேடி வந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கணேசனின் மனைவி தேன்மொழி மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

தாய் தந்தை மீது கொலை வழக்கு பதிவு செய்ததால் விரக்தி அடைந்த மகள்கள் அஸ்மிதா, நிவேதா ஆகியோர் இன்று காலை வீட்டில் வி‌ஷம் குடித்து மயங்கினார். உயிருக்கு போராடிய 2 பேரை உறவினர்கள் மீட்டு காரைக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்கள் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தாய், தந்தை, சகோதரர் மீது கொலை வழக்கு பதிவு செய்ததால் விரக்தியில் இருந்த 2 இளம்பெண்கள் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் காரைக்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே 2 பேரும் சிகிச்சை பெற்று வரும் அரசு ஆஸ்பத்திரி முன்பு அவர்களது உறவினர்கள் மற்றும் கட்சியினர் ஏராளமானோர் திரண்டனர். இதையடுத்து பாதுகாப்புக்காக அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.

Similar News