செய்திகள்
முக ஸ்டாலின்

நீட் தேர்வு பயத்தால் தற்கொலை செய்த காட்பாடி மாணவியின் பெற்றோருக்கு மு.க.ஸ்டாலின் ஆறுதல்

Published On 2021-11-02 09:03 GMT   |   Update On 2021-11-02 09:03 GMT
நீட் தேர்வு பயம் காரணமாக தற்கொலை செய்துகொண்ட மாணவி சவுந்தர்யாவின் பெற்றோர் திருநாவுக்கரசு, ருக்மணி ஆகியோரை சந்தித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.
வேலூர்:

வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த தலையாரம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி திருநாவுக்கரசு. இவரது மனைவி ருக்மணி. இவர்களுக்கு 4 மகள்கள். இதில், 3 பேருக்குத் திருமணம் ஆகி அவர்களது குடும்பத்தாருடன் வசித்து வருகின்றனர். 4-வது மகள் சவுந்தர்யா (17). வேலூர் தோட்டப்பாளையம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்தார்.

இதைத் தொடர்ந்து, மருத்துவப் படிப்பில் சேர சவுந்தர்யா நீட் தேர்வுக்குத் தயாரானார். கடந்த 12-ம் தேதி காட்பாடியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் அமைக்கப்பட்ட நீட் தேர்வு மையத்தில் கலந்து கொண்டு தேர்வு எழுதினார். தேர்வு முடிந்து வீட்டுக்குத் திரும்பிய சவுந்தர்யா, தன் தாயார் ருக்மணியிடம் வேதியியல், இயற்பியல் பாடங்களில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகள் கடினமாக இருந்ததாகவும், அதனால் நீட் தேர்வைத் தான் சரியாக எழுதவில்லை என்றும் தேர்ச்சி முடிவு எப்படி இருக்குமோ? எனவும் கவலையுடன் தெரிவித்து அழுதார்.

மாணவிக்கு அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆறுதல் கூறி, தேர்வு முடிவு எதுவாக இருந்தாலும் பரவாயில்லை எனக்கூறி அவரைத் தேற்றினர். பெற்றோர் வெளியே சென்றிருந்த நேரத்தில் மாணவி சவுந்தர்யா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வேலூரில் இன்று இலங்கை தமிழர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்திருந்தார். அவர் அண்ணா சாலையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் தங்கியிருந்தார்.

அப்போது நீட் தேர்வு பயம் காரணமாக தற்கொலை செய்து கொண்ட மாணவி சவுந்தர்யாவின் பெற்றோர் திருநாவுக்கரசு, ருக்மணி ஆகியோரை சந்தித்து ஆறுதல் கூறினார். முதலமைச்சரிடம் தங்களது மகள் இல்லாததால் தவிக்கிறோம். அரசு உதவி செய்ய கோரி மனு அளித்ததாக திருநாவுக்கரசு, ருக்மணி ஆகியோர் தெரிவித்தனர்.

Tags:    

Similar News