செய்திகள்
மெயினருவி மற்றும் பழைய குற்றாலத்தில் ஆர்ப்பரித்துக்கொட்டும் வெள்ளம்.

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை- மீனவர்கள் 5வது நாளாக கடலுக்கு செல்லவில்லை

Published On 2021-11-02 13:03 IST   |   Update On 2021-11-02 14:58:00 IST
தென்காசி மாவட்டத்தில் விடிய விடிய சாரல் மழை பெய்துகொண்டே இருந்தது. இதனால் மாவட்டம் முழுவதும் பெரும்பாலான குளங்களுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது.
நெல்லை:

வடகிழக்கு பருவமழை தொடங்கிய நாள் முதல் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

நெல்லை மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது. பிரதான அணையான பாபநாசம் முழு கொள்ளளவான 143 அடியை எட்டுவதற்கு இன்னும் 8 அடியே தேவை. சேர்வலாறு அணை நீர்மட்டம் 137.60 அடியாக உள்ளது.

இதற்கிடையே பிசான சாகுபடிக்காக நேற்று முதல் அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. பரவலாக மழை பெய்து வருவதால் பாபநாசம் அணையில் இருந்து வினாடிக்கு 1,034 கன அடி நீர் ஆற்றில் திறந்து விடப்படுகிறது. ஆற்றில் வெள்ளப்பெருக்கு சற்று தணிந்துள்ளது. ஆனாலும் பொதுமக்கள் குளிக்க தடை நீடிக்கிறது.

நேற்று காலை முதல் இன்று அதிகாலை வரை மாவட்டத்தில் பாளை, நெல்லை, சேர்வலாறு, பாபநாசம், மணிமுத்தாறு, சேரன்மகாதேவி, களக்காடு, மூலக்கரைப்பட்டி, தென்காசி, செங்கோட்டை, ஆய்குடி, அம்பை, ராதாபுரம், நாங்குநேரி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. பெரும்பாலான இடங்களில் கனமழை காரணமாக சாலையோரத்தில் பழமையான மரங்கள் முறிந்து விழுந்தன. மாநகர பகுதியிலும் தச்சநல்லூர் மணிமூர்த்தீஸ்வரம் பகுதியில் மரங்கள் முறிந்து விழுந்ததால் மின்தடை ஏற்பட்டது. மின் ஊழியர்கள் துரித நடவடிக்கையால் மின்சாரம் விரைவில் வந்தது.

இன்று காலை வண்ணார்பேட்டை தெற்கு பைபாஸ் சிக்னல் அருகே சாலையில் முறிந்து விழுந்த மரத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாகனங்கள் எதிர்சாலையில் இயக்கப்பட்டன.

மாவட்டத்தில் அதிகபட்சமாக மணிமுத்தாறில் 43.8 மில்லிமீட்டரும், அம்பையில் 43.6 மில்லிமீட்டரும் மழை பதிவாகியது. நம்பியாறு அணை பகுதியில் 22 மில்லிமீட்டர் மழை பெய்ததால் களக்காடு தலையணையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன.

இதனால் கொட்டும் சாரல் மழையிலும் மாணவர்கள் நனைந்தபடி பள்ளிக்கு சென்றனர். தொடர்மழையால் ராதாபுரம், கூட்டப்பனை, கூடுதாழை உள்ளிட்ட பகுதிகளில் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. ஒரு சில மீனவர்கள் மட்டும் கடலுக்குள் சிறிது தூரம் மட்டுமே சென்று மீன்பிடித்து திரும்பினர்.

தூத்துக்குடி மாவட்டத்திலும் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியது. கோரம்பள்ளம் பி.எஸ்.பி. நகர் பகுதியில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்துள்ளது.

பாளை ரோட்டில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். கயத்தாறு, திருச்செந்தூர், காயல்பட்டினம், ஆறுமுகநேரரி, கோவில்பட்டி, விளாத்திகுளம், எட்டயபுரம், ஓட்டப்பிடாரம், மணியாச்சி என மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. ஒரு சில இடங்களில் தரைப்பாலங்கள் மூழ்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.



ஸ்ரீவைகுண்டம், சாயர்புரம் உள்ளிட்ட இடங்களில் 2 தொழிலாளிகளின் வீடுகள் மழையால் இடிந்து விழுந்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாக 2 குடும்பத்தினரும் உயிர்தப்பினர். இதேபோல் பெரும்பாலான இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. மாவட்டத்தில் 5-வது நாளாக இன்றும் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் படகுகள் அனைத்தும் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

தென்காசி மாவட்டத்தில் விடியவிடிய சாரல் மழை பெய்துகொண்டே இருந்தது. இதனால் மாவட்டம் முழுவதும் பெரும்பாலான குளங்களுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்துவரும் கனமழை காரணமாக குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

மெயின் அருவியில் ஆர்ச்சை தொட்டபடி தண்ணீர் விழுகிறது. ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதன் மூலம் பாசனம் பெறும் குளங்களில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குளங்கள் நிரம்பி வழிகின்றன. பாவூர்சத்திரம் நாகல்குளம், சுரண்டை ரெட்டைகுளம், மாறாந்தை குளம் உள்ளிட்ட பல்வேறு குளங்களில் தண்ணீர் நிரம்பி மறுகால் பாய்கிறது.

ஆலங்குளம், பாவூர்சத்திரம், கடையம், சங்கரன்கோவில், செங்கோட்டை, சிவகிரி உள்ளிட்ட இடங்களிலும் விடியவிடிய பலத்தமழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஒரு சில இடங்களில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக மின்தடை ஏற்பட்டது.

கடனா அணையில் 83 அடி நீர் இருப்பு உள்ளது. 132 அடி கொள்ளளவு கொண்ட அடவிநயினார் அணையில் 128 அடி நீர் இருப்பு உள்ளது. குண்டாறு அணை தொடர்ந்து நிரம்பி வழிகிறது.



Tags:    

Similar News