செய்திகள்
டாக்டர் பிரபாவதி தலைமையிலான உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு செய்தனர்

காரைக்குடியில் ரசாயணம் தடவிய மீன்கள் பறிமுதல் - உணவு பாதுகாப்பு துறையினர் அதிரடி

Published On 2021-08-01 08:03 GMT   |   Update On 2021-08-01 08:03 GMT
காரைக்குடி அருகே உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரசாயணம் தடவி விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த சுமார் 50 கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

காரைக்குடி:

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் ஆங்காங்கே சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட சிறு மீன் கடைகளும், கழனிவாசல் சாலையில் ஒருங்கிணைந்த மீன் அங்காடியும் இயங்கி வருகின்றன.

தூத்துக்குடி, கன்னியாகுமரி, நாகர்கோவில், ராமேஸ்வரம், தொண்டி ஆகிய கடல் பகுதிகளில் இருந்து மீன்கள் இங்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.

கன்னியாகுமரி, நாகர்கோவில் போன்ற தொலை தூர ஊர்களில் இருந்து வரும் மீன்கள் கெடாமல் இருப்பதற்காக ரசாயணம் தடவி பதப்படுத்தி விற்கப்படுவதாக மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் பிரபாவதிக்கு ரகசிய தகவல் வந்தது.

இன்று ஞாயிற்றுக்கிழமை மீன்கள் அதிக அளவில் விற்கப்படும் என்பதால், நேற்று இரவே மதுரையில் இருந்து மீன்வள அதிகாரிகளை வரவழைத்து, உணவு பாதுகாப்பு துறை அலுவலர் பிரபாவதி இன்று காலை 6 மணி முதலே, வாட்டர் டேங்க், கழனிவாசல் ரோடு, செக்காலை போன்ற பகுதிகளில் இயங்கி வந்த மீன் கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டார்.

சோதனையில் ரசாயணம் தடவி விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த சுமார் 50 கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தடை செய்யப்பட்ட பாலிதீன் பொருட்களும் சுமார் ஒரு கிலோ அளவில் பறிமுதல் செய்யப்பட்டது. காவல் துறையினர், நகராட்சி நிர்வாகத்தினரின் உதவியோடு உணவு பாது காப்புத்துறையினர் இந்த திடீர் சோதனையில் ஈடுபட்டனர். 

Tags:    

Similar News