செய்திகள்
கூடலூர் அருகே புத்தூர்வயல் பகுதியில் வீட்டை சுற்றி தண்ணீர் தேங்கியிருப்பதை படத்தில் காணலாம்.

கூடலூரில் 1 மணி நேரம் கொட்டி தீர்த்த மழை

Published On 2021-06-23 04:06 GMT   |   Update On 2021-06-23 14:27 GMT
திடீரென பெய்த மழையால் கூடலூர் புளியம்பாரா ஆற்று வாய்க்காலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அங்குள்ள தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது.

கூடலூர்:

நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்தால் கடந்த வாரத்தில் கனமழை கொட்டியது. அதன்பின்னர் சற்று மழை குறைந்து வெயில் அடிக்க தொடங்கியது.

இந்த நிலையில் கூடலூர், பந்தலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று மதியத்திற்கு பிறகு வானத்தில் கருமேகங்கள் திரண்டிருந்தன. தொடர்ந்து மாலையில் கனமழை பெய்தது. சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக கொட்டி தீர்த்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.

திடீர் என பெய்த இந்த மழையால் கூடலூர் புளியம்பாரா ஆற்று வாய்க்காலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அங்குள்ள தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது. மேலும் ஆற்று வாய்க்கால் தண்ணீர் அருகே உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்ததால் அங்கு பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் அனைத்தும் சேதமடைந்தது. இதன் காரணமாக விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

கூடலூர் அருகே பாடந்தொரை ஆற்று வாய்க்காலிலும் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதனால் அருகே உள்ள ஆலவயல் பகுதியில் இருந்த 10-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து அந்த பகுதியே வெள்ளக்காடாக காட்சியளித்தது.

இந்த வெள்ளத்தில் வி‌ஷ பாம்புகளும் அடித்து வரப்பட்டதால் மக்கள் அச்சம் அடைந்தனர்.

நீலகிரி மாவட்டத்தில் பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-

நடுவட்டம்-38, கூடலூர்-16, பந்தலூர்-40 செருமுள்ளி-30, பாடந்தொரை-35, ஓவேலி-17, தேவாலா-21 அப்பர் கூடலூர்-16, சேரங்கோடு-18.

Tags:    

Similar News