செய்திகள்
கோப்பு படம்

ஈரோடு மாநகரில் தொற்று பரவலினால் 45 இடங்கள் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிப்பு

Published On 2021-06-08 10:00 GMT   |   Update On 2021-06-08 10:00 GMT
புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்ட பகுதிகள் கண்டறியப்பட்டு அங்கு நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, நோய் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டு வருகிறது.

ஈரோடு:

தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் வர தொடங்கிய நிலையில், ஈரோடு மாவட்டத்தில் மட்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது.

தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருந்த சென்னை பெரு நகரமே நேற்று முன்தினம் தொற்று குறைந்து, 3-வது இடத்திற்கு சென்றது. இதனால், தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டோர் மாவட்டத்தில் 2-ம் இடத்தில் இருந்த கோவை முதலிடத்திற்கும், 3-ம் இடத்தில் இருந்த ஈரோடு 2-ம் இடத்தையும் பிடித்தது.

ஈரோடு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, கிராமப்பகுதிகள் என அனைத்து பகுதிகளிலும் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் நோய் பாதிப்பு தன்மைக்கேற்ப வீடுகளிலும், முகாம்களிலும் தனிமைப்படுத்தப்பட்டனர். அதிக பாதிப்புகள் உடையவர்கள் மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதில், ஈரோடு மாநகராட்சி பகுதியில் தொற்று பரவாமல் இருந்த இடங்களில் புதிதாக தொற்று பரவ தொடங்கியுள்ளது. இதனால், ஒரே வீதி, தெருக்களில் 5-க்கும் மேற்பட்ட குடும்பத்தில் தொற்று உறுதி செய்யப்பட்டால் அப்பகுதி நோய் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டது.

இதில் மேலும் புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்ட அடுத்தடுத்து வசித்து வந்ததாக ஈரோடு முனிசிபல்காலனி அடுத்த பாப்பாத்திக்காடு, கருங்கல் பாளையம், வீரப்பன் சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் நோய் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்ட தடுப்புகள் அமைக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டது. இதில், பாப்பாத்திக்காடு பகுதியில் 9 பேருக்கு நேற்று ஒரே நாளில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஈரோடு மாநகராட்சி கமி‌ஷனர் இளங்கோவன் கூறியதாவது:-

ஈரோடு மாநகரில் கொரோனா தொற்றால் தினசரி 400 முதல் 420 பேர் பாதிக்கப்படுகின்றனர். அங்கு நோய் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அவர்கள் தனிமைப்படுத்தப்படுகின்றனர். தொற்றினை முன்னதாக கண்டறிய வீடு வீடாக சென்று காய்ச்சல், சளி, இருமல் உள்ளோருக்கு அந்த பகுதியிலேயே கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

அதன்பேரில், நேற்று முன்தினம் 300 பேருக்கு பரிசோதனை மேற்கொண்டதில் 17 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் வீட்டிலேயே தனிமையில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்ட பகுதிகள் கண்டறியப்பட்டு அங்கு நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, நோய் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டு வருகிறது. அங்கு தடுப்புகள் அமைத்து தனிமைப்படுத்தி வருகிறோம். இதன்பேரில்,நேற்று நிலவரப்படி ஈரோடு மாநகராட்சியில் 45 இடங்கள் நோய் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கவும், தினசரி சுகாதார பணியாளர்கள் மூலம் மருத்துவ ஆலோசனைகளும், மருந்துகளும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் காய்ச்சல் சளி உள்ளதா என மாநகர் பகுதியில் தினமும் 1.30 லட்சம் வீடுகளை 200 மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் 1200 தன்னார்வலர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News