செய்திகள்
குடிநீர் இன்றி பலியான ஆண் யானை

முதுமலை புலிகள் காப்பகத்தில் குடிநீர் கிடைக்காமல் ஆண் யானை உயிரிழப்பு

Published On 2021-04-03 06:03 GMT   |   Update On 2021-04-03 06:03 GMT
யானையின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னரே இறப்புக்கான காரணம் குறித்து தெரியவரும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.
ஊட்டி:

மலை மாவட்டமான நீலகிரி 60 சதவீதம் அடர்ந்த வனப்பகுதியை கொண்டதாகும். இங்குள்ள காடுகளில் சிறுத்தை, புலி, யானை, கரடி, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகம் வசித்து வருகின்றன.

வனவிலங்குகள் குடிநீர், உணவு தேடி அவ்வப்போதும் ஊருக்குள் நுழைந்து விடுகிறது. இதனால் சில சமயங்களில் மனித-விலங்கு மோதல் ஏற்பட்டு உயிரிழப்பு சம்பவம் நிகழ்ந்து வருகிறது.

தற்போது கோடை காலம் என்பதால் வனப்பகுதியில் உள்ள சிற்றாறு, குளம், குட்டைகள் வறண்டு காணப்படுகிறது. இதனால் வனவிலங்குகள் குடிநீர் தேடி ஊருக்குள் படையெடுத்து வருகின்றன. குறிப்பாக வனத்தின் மிகப்பெரிய விலங்கான யானைக்கு அதிக குடிநீர் மற்றும் உணவு தேவைப்படுகிறது.

இதனால் யானைகள் நீண்ட தூரம் குடிநீர் தேடி அலைகின்றன.

இந்நிலையில நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம், மாயாறு காப்புக்காடு, மொட்டத்துறை வனச்சரகப் பகுதியில் மசினகுடி வனச்சரகத்தினர் நேற்று ரோந்து சென்றபோது ஒரு யானை இறந்து கிடந்தது. இதைப்பார்த்த வனஊழியர்கள் இது குறித்து முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் ஸ்ரீகாந்துக்கு தகவல் தெரிவித்தனர்.தகவலையடுத்து புலிகள் காப்பகத்தினர் சம்பவ இடத்துக்கு சென்று இறந்து கிடந்த யானையின் உடலை பார்த்தனர்.

இறந்து கிடந்தது இளம் வயது ஆண் யானை என்பது தெரியவந்தது. தந்தங்கள் வெட்டி எடுக்கப்படவில்லை. கடும் வறட்சியால் குடிநீர் கிடைக்காமல் இறந்திருக்கலாம் என்று தெரியவருகிறது. இருந்தாலும் யானையின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னரே யானையின் இறப்புக்கான காரணம் குறித்து தெரியவரும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.



Tags:    

Similar News