செய்திகள்
வீரபாண்டியின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை

அமைச்சர் விஜயபாஸ்கர் அண்ணனின் உதவியாளர் வீட்டில் வருமானவரி சோதனை

Published On 2021-03-27 03:16 GMT   |   Update On 2021-03-27 04:35 GMT
விராலிமலையில் அமைச்சர் விஜயபாஸ்கர் அண்ணனின் உதவியாளர் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
விராலிமலை:

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க.வேட்பாளர் அமைச்சர் சி.விஜயபாஸ்கர். இவரது அண்ணன் உதயகுமார். இவருக்கு சொந்தமான கல்லூரி இலுப்பூரில் உள்ளது. இங்கு விராலிமலை அம்மன் கோவில் அருகே உள்ள ஆசாரி தெருவை சேர்ந்த மகாலிங்கம் மகன் வீரபாண்டி (வயது 32) என்பவர் பணியாற்றி வருகிறார்.

மேலும், அவர் உதயகுமாரின் உதவியாளராகவும் உள்ளார். இந்தநிலையில் நேற்று மதியம் 12 மணி அளவில் வீரபாண்டி வீட்டுக்கு வருமானவரித்துறை திருச்சி மண்டல துணை ஆணையர் அனுராதா தலைமையில் 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் வந்தனர். அவர்கள் வீரபாண்டியின் வீடு முழுவதையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து சோதனை நடத்தினர். மேலும் வீட்டில் உள்ளவர்களை வெளியே செல்லவும், வெளியில் உள்ளவர்களை வீட்டுக்குள் செல்லவும் அனுமதிக்கவில்லை. அதுமட்டுமின்றி வீரபாண்டியின் செல்போனில் தொடர்பில் இருந்தவர்களின் வீட்டிற்கும் சென்று சோதனை நடத்தினர். வீரபாண்டியின் வீட்டின் அருகே உள்ள வீடுகளிலும் சோதனை நடத்தினர்.

மேலும், சிலரின் முகவரிகளையும் வாங்கினர். அவர்களது வீடுகளிலும் சோதனை நடத்தப்படலாம் என தெரிகிறது. வீரபாண்டி வீட்டில் தொடர்ந்து இரவு முழுவதும் சோதனை நடைபெற்றது. இதில் கட்டுக்கட்டாக பணமும், முக்கிய ஆவணங்களும் சிக்கியதாக தெரிகிறது.

வீரபாண்டி விராலிமலையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலைய காசநோய் பிரிவில் தற்காலிக முதல்நிலை சிகிச்சை மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News