செய்திகள்
மோசடி

‘மெடிக்கல் சீட்’ வாங்கித் தருவதாக ரூ.57 லட்சம் மோசடி- கிறிஸ்தவ பாதிரியார் உள்பட 3 பேர் கைது

Published On 2020-10-20 06:58 GMT   |   Update On 2020-10-20 06:58 GMT
வேலூர் தனியார் மருத்துவக் கல்லூரியில் மெடிக்கல் சீட் வாங்கித் தருவதாக ரூ.57 லட்சம் மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக கிறிஸ்தவ பாதிரியார் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
வேலூர்:

செங்கல்பட்டு மாவட்டம் காரணைப்புதுச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன், ஓய்வுப்பெற்ற அரசு என்ஜினீயர். இவருடைய மகன் ஈஸ்வர் சீனிவாசன் (வயது20). இவர் கடந்த 2017-ம் ஆண்டு நடந்த நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றார். ஆனால், மதிப்பெண் குறைவாக எடுத்ததால் தனியார் கல்லூரியில் நிர்வாக ஒதுக்கீட்டில் மெடிக்கல் சீட் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதனால், சீனிவாசன் வேலூரில் உள்ள தனியார் (சி.எம்.சி.) மருத்துவக்கல்லூரிக்கு வந்தார். அங்கு மெடிக்கல் சீட் சம்மந்தமாக யாரை அணுகுவது என்று விசாரித்துள்ளார். அங்கிருந்த சிலர் சி.எஸ்.ஐ. மத்திய தேவாலயத்தில் அந்த சமயம் பாதிரியாராக இருந்த சாதுசத்தியராஜ் (67) என்பவரை பார்க்கும் படி தெரிவித்தனர். அதையடுத்து சீனிவாசன் சென்று சாதுசத்தியராஜை பார்த்தார்.

அவர் காட்பாடி விருதம்பட்டு பகுதியைச் சேர்ந்த, தமிழக மக்கள் முன்னேற்றக்கழக மாவட்டச்செயலாளர் தேவகுமார் (33), அவரின் தம்பியான அன்பு கிராண்ட் (30) ஆகியோரை பார்க்கும்படியும், அவர்கள் சொல்வதுபோல் செய்தால் கண்டிப்பாக மெடிக்கல் சீட் கிடைக்கும் என்று தெரிவித்தார். தொடர்ந்து, சீனிவாசன் அவர்கள் இருவரையும் சந்தித்தார். அவர்கள் ரூ.57 லட்சம் கொடுத்தால் மெடிக்கல் சீட் வாங்கித் தருவதாக அவரிடம் தெரிவித்தனர். மகனை டாக்டர் ஆக்க ஆசைப்பட்ட சீனிவாசன் அவர்கள் கேட்ட பணத்தை தவணை முறையில் வங்கி கணக்கு மூலமாகவும், நேரடியாகவும் கொடுத்துள்ளார்.

ஆனால், 3 ஆண்டுகள் ஆகியும் சீட் வாங்கித் தரமாலும், பணத்தையும் திருப்பி தராமலும் 3 பேரும் ஏமாற்றி வந்துள்ளனர். இதுகுறித்து சீனிவாசன் அவர்களிடம் கேட்டபோது, பணம் தரமுடியாது என்று மிரட்டியுள்ளனர். இதையடுத்து, சீனிவாசன் வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமாரிடம் கடந்த சில நாட்களுக்கு முன்பு புகார் மனு அளித்தார். இந்த மனுவின் மீது விசாரணை நடத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு, அவர் உத்தரவிட்டார்.

இதையடுத்து, மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் தலைமையில் இன்ஸ்பெக்டர் லக்குவன் மற்றும் போலீசார் சாதுசத்தியராஜ், தேவகுமார், அன்புகிராண்ட் ஆகியோரிடம் விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் மெடிக்கல் சீட் வாங்கித் தருவதாக பணம் வாங்கி மோசடி செய்ததும், சாது சத்தியராஜ் சாய்நாதபுரத்தில் உள்ள தேவாலயத்தில் பாதிரியாராக பணிபுரிவதும் உறுதியானது. இதையடுத்து, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் நேற்று கைது செய்தனர். தொடர்ந்து, அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி பின்னர், வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News