செய்திகள்
விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவிலில் மது, மான் கறி விருந்து மேலாளர் உள்பட 2 பேர் பணியிடை நீக்கம்
விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவிலில் மது, மான் கறி விருந்து சாப்பிட்ட மேலாளர் உள்பட 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
விருத்தாசலம்:
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் மணவாளநல்லூரில் பிரசித்திபெற்ற கொளஞ்சியப்பர் கோவில் உள்ளது. இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் இக்கோவில் உள்ளது. இந்த கோவிலில் 20-க்கும் மேற்பட்ட மான்கள் மற்றும் மயில்கள் வளர்க்கப்படுகின்றன. கோவிலுக்கு வரும் பக்தர்கள் மான்களுக்கு காய்கறிகள், பழங்கள் கொடுப்பார்கள்.
கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் கடந்த மார்ச் மாதம் முதல் கொளஞ்சியப்பர் கோவில் பூட்டி கிடக்கிறது.
பக்தர்கள் கோவிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சிவாச்சாரியார்கள் தினந்தோறும் வழக்கமான பூஜைகளை செய்து வருகிறார்கள். மேலும் கோவில் மற்றும் வளாகத்தில் துப்புரவு பணி மேற்கொள்ள ஊழியர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் கோவிலில் பணிபுரியும் ஊழியர்கள் சிலர், அங்குள்ள நந்தவனத்தில் அமர்ந்து மது அருந்தியபடி இறைச்சி சாப்பிடும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த வீடியோ குறித்து அறிந்த விழுப்புரம் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் செந்தில்வேலன் அதிரடி நடவடிக்கை எடுத்தார். அதன்படி வீடியோ பதிவில் இருந்த கோவில் மேலாளர்(பொறுப்பு) சிவராஜன், காவலர் சிவக்குமார் ஆகிய 2 பேரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.