செய்திகள்
கோப்புப்படம்

கொரோனா இருந்தாலும் மருத்துவமனையில் இடம் இல்லை- செவிலியர் பேசிய வீடியோ வெளியானதால் பரபரப்பு

Published On 2020-08-13 14:42 IST   |   Update On 2020-08-13 14:42:00 IST
கொரோனா இருந்தாலும் மருத்துவமனையில் இடம் இல்லை என்றும், வீட்டிலேயே நோயாளிகள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் செவிலியர் ஒருவர் பேசிய வீடியோ வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
குத்தாலம்:

மயிலாடுதுறையில் அரசு மருத்துவமனை உள்ளது. இந்த மருத்தவமனையில் ரூ.18 கோடியில் 200 படுக்கை வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடம் கட்டப்பட்டது. இந்த புதிய கட்டிடம் கொரோனா சிகிச்சை வார்டாக மாற்றப்பட்டு அதில் கொரோனா தொற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டவர்கள், தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் 200 படுக்கைகளும் நிரம்பியது. இதனால் வேறு இடங்களில் சிகிச்சை மையம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

இந்த நிலையில் கொரோனா பரிசோதனைக்காக ரத்தம், சளி மாதிரி கொடுத்தவர்கள், தொற்று உறுதி செய்யப்பட்டு 14 நாட்கள் கழித்து மறுபரிசோதனைக்கு மாதிரி கொடுத்தவர்கள் பரிசோதனை முடிவுகள் எப்போது கிடைக்கும் என்று பணியில் இருந்த செவிலியரிடம் கேட்டனர்.

அப்போது அந்த செவிலியர், பரிசோதனை முடிவுகள் வந்துவிடும் என்றும், தொற்று உறுதி செய்யப்பட்டாலும் 7 நாட்கள் மட்டுமே இங்கு (மருத்துவமனையில்) தங்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும் என்றும் அதிக அளவில் நோயாளிகள் இருப்பதால் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் வீடுகளில் தங்களை தனிமைப்படுத்திகொள்ள வேண்டும் என்றும் கூறினார். இதனால் அங்கு பரிசோதனைக்கு கொடுத்தவர்கள் செவிலியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த செவிலியர் உயர் அதிகாரிகள் கூறியதை நான் உங்களிடம் தெரிவித்து விட்டேன். எந்த சந்தேகமாக இருந்தாலும் டாக்டரிடம் பேசிக்கொள்ளுங்கள் என்று கூறினார்.

தற்போது இந்த வீடியோ சமுக வலைதளங்களில் வீடியோ வேகமாக பரவி வருகிறது. இதனால் டாக்டர்கள் மற்றும் மருத்துவ துறை ஊழியர்கள் இடையே பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

Similar News