செய்திகள்
கொரோனா வைரஸ்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 16 நாட்களுக்கு பிறகு ஒருவருக்கு கொரோனா

Published On 2020-05-01 13:52 IST   |   Update On 2020-05-01 13:52:00 IST
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 16 நாட்களுக்கு பிறகு ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. இதனால் ராணிப்பேட்டை மீண்டும் சிவப்பு மண்டலத்திற்கு மாறியது.
ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை கலெக்டர் திவ்யதர்ஷினி கூறியதாவது:-

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஏற்கனவே 39 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் கடந்த 16 நாட்களாக புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்பதால் சிவப்பு மண்டலத்திலிருந்து ஆரஞ்சு மண்டலத்திற்கு மாறியது.

இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்திலுருந்து ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு வந்த 58 வயதுடைய நபருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. அதனால் ஆரஞ்சு நிறத்திலிருந்து ராணிப்பேட்டை மாவட்டம் நேற்று மீண்டும் சிவப்பு மண்டலத்திற்கு மாறியது.

புதியதாக பாதிப்பு ஏற்பட்ட நபர் கடந்த 28ம் தேதி காலை நமது மாவட்டத்திற்கு வந்துள்ளார். அவர் வந்த உடனே பரிசோதனை செய்யப்பட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அவரது குடும்ப உறுப்பினருக்கும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. புதியதாக கொரோனா பாதிப்பு நம் மாவட்டத்திலிருந்து உருவாகவில்லை.

கட்டுப்பாட்டு பகுதிகளில் எந்தவித மாற்றம் இல்லை. தற்போதுள்ள நிலையே தொடரும்.

அரசு உத்தரவுபடி கட்டுப்பாட்டு பகுதி இல்லாத இடங்களில் குறிப்பிட்ட அத்தியாவசிய பணிகளுக்காக அனுமதிக்கப்பட்ட தொழிற்சாலைகள் மட்டும் செயல்படுகிறது. வெளிமாநில வெளி மாவட்டங்களில் இருந்து ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு வந்திருந்தால் அருகில் உள்ளவர்கள் உடனடியாக மாவட்ட கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

சென்னை கோயம்பேடு உள்பட அருகில் உள்ள மாவட்டங்களுக்கு அத்தியாவசிய பொருளான காய்கறியை கொண்டு வருவதற்கு பாஸ் பெற்று சென்று வந்தவர்களையும் பரிசோதனை செய்து வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்குவது குறித்து மத்திய மாநில அரசுகளின் உத்தரவுபடி தொழிற்சாலைகள் பின்பற்ற வேண்டும். ராணிப்பேட்டை மாவட்டத்தில் கட்டுப்பாட்டு பகுதிகளாக உள்ள ஒருசில இடங்கள் 28 நாட்கள் கால அவகாசம் முடியும் தருவாயில் உள்ளது.

அந்த பகுதிகளில் மட்டும் அத்தியாவசிய தேவைகள் பொருட்கள் கிடைக்க ஒரு சில தளர்வுகள் ஏற்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News