செய்திகள்
கீழடி அகழாய்வில் காணப்பட்ட இரு அடுக்குகள் தரைத்தளம்.

கீழடியில் 6-வது கட்ட அகழாய்வு: இரு அடுக்குகள் தரைதளம் கண்டுபிடிப்பு

Published On 2020-03-07 05:20 GMT   |   Update On 2020-03-07 05:20 GMT
கீழடியில் 2 அடுக்குகள் கொண்ட தரை தளம் ஏற்கனவே கண்டறியப்பட்ட தரைதளத்தின் 10 அடி தூரத்திலேயே கண்டறியப்பட்டதால் அதன் தொடர்ச்சியாக இருக்க வாய்ப்புள்ளதாக தொல்லியல் துறையினர் தெரிவித்தனர்.
மானாமதுரை:

சிவகங்கை மாவட்டம், கீழடியில் கடந்த பிப்ரவரி மாதம் 19-ந் தேதி 6-ம் கட்ட அகழாய்வை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார்.

கடந்த 16 நாட்களாக நடந்த அகழாய்வில் இரு வண்ண பானைகள், பானை ஓடுகள்,பாசிகள், கண்டறியப்பட்டன.

5-ம் கட்ட அகழாய்வில் கண்டறியப்பட்ட சுடுமண் குழாயின் தொடர்ச்சியை கண்டறிவதற்காக தமிழக தொல்லியல் துறை மீண்டும் கீழடியில் நீதியம்மாள் நிலத்தில் அகழாய்வை தொடங்கியது.

குழிகள் தோண்டப்பட்ட நிலையில் சுடுமண் குழாயின் தொடர்ச்சி கிடைக்கவில்லை. இதனையடுத்து சுடுமண் குழாய் கண்டறியப்பட்ட இடத்தின் மேற்கு பகுதியில் அகழாய்வு பணி கடந்த 2 நாட்களுக்கு முன்பு தொடங்கியது.

அப்போது 4 அடி ஆழத்தில் 2 அடுக்குகள் கொண்ட தரை தளம் தென்பட்டது. ஏற்கனவே 5-ம் கட்ட அகழாய்வின்போது கண்டறியப்பட்ட தரைதளத்தின் 10 அடி தூரத்திலேயே இந்த தரை தளம் கண்டறியப்பட்டதால் அதன் தொடர்ச்சியாக இருக்க வாய்ப்புள்ளது என தொல்லியல் துறையினர் தெரிவித்தனர். தரை தளம் கடந்த 5-ம் கட்ட தரை தளம் போல செங்கல் கட்டுமானத்திற்கு மேலே களிமண் பூச்சுடன் காணப்படுகிறது.

தற்போது தரைதளம் 3அடி தூரத்திற்கு உள்ளது. மேலும் அகழாய்வு நடைபெறும்போது முழுபகுதியும் கிடைக்க வாய்ப்புள்ளது. தற்போது கீழடி அகழாய்வை காண வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.



Tags:    

Similar News