செய்திகள்
குடிநீர் கேன்

கேன் குடிநீர் உரிமையாளர்கள் 3-வது நாளாக போராட்டம்- குடி தண்ணீர் சப்ளை பாதிப்பு

Published On 2020-02-29 13:18 IST   |   Update On 2020-02-29 14:32:00 IST
கேன் குடிநீர் உற்பத்தி நிறுவனங்கள் 3-வது நாளாக தொடர்ந்த வேலை நிறுத்த போராட்டத்தால், பல்வேறு இடங்களில் கேன் குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டனர்.

திருவள்ளூர்:

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில், 470 கேன் குடிநீர் உற்பத்தி நிறுவனங்கள் உள்ளன. இதில் திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் 215 நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.

மாவட்டத்தில் நாள் ஒன்றுக்கு சுமார் 5 லட்சம் குடிநீர் கேன் விநியோகிக்கப்படுகிறது. இந்த நிறுவனங்கள் நிலத்தடி நீரை சுத்திகரித்து விற்பனை செய்கின்றன.

இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, தமிழகத்தில் நிலத்தடி நீர் குறைவாக உள்ள இடங்களில் நீர் எடுக்கக் கூடாது என அரசு தடை விதித்துள்ளது. பெரும்பாலான குடிநீர் தயாரிப்பு நிறுவனங்கள் முறையான அனுமதியுடன் செயல்பட்டு வருகின்றன.

அரசின் இந்த தடை உத்தரவால் பல்வேறு குடிநீர் உற்பத்தி நிறுவனங்கள் பாதிக்கப்படுவதாக கூறி கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்க கூட்டமைப்பினர் தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் முதல் இன்று 3-வது நாளாக காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் திருவள்ளூர் மாவட்டத்தில் குடிநீர் கேன் உற்பத்தி நிறுவனங்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதால் 25 ரூபாய் விற்ற குடிநீர் கேன் தற்போது ரூ.50 முதல் 60 வரை விற்கப்படுகிறது.

மாவட்டத்தில் பல இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது.

இந்த சூழ்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு வீடு, விடுதி, உணவகம், தொழிற்சாலை ஆகிய இடங்களில் குடிநீர் கேன்களை நம்பி தான் இருக்கின்றனர்.

இந்த சமயத்தில் குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Similar News