செய்திகள்
கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கண்டெய்னர் லாரி - (உள்படம்) பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா பண்டல்கள்

கண்டெய்னரில் கடத்திய ரூ.30 லட்சம் மதிப்புடைய 620 கிலோ கஞ்சா பண்டல்கள் பறிமுதல் - 5 பேர் கைது

Published On 2020-02-13 11:28 GMT   |   Update On 2020-02-13 11:28 GMT
வேதாரண்யத்தில் கண்டெய்னர் லாரியில் ரூ.30 லட்சம் மதிப்புடைய 620 கிலோ கஞ்சா கடதப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேதாரண்யம்:

நாகை மாவட்டம் கோடியக்கரை கடற்கரை வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்தப்படுவதாக நாகை கடலோர காவல்படை போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தது. இதனை தடுக்கும் விதமாக கடற்கரையோரங்கள் மற்றும் நாகை முக்கிய சாலைகளில் அவ்வப்போது தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இருந்தும் கஞ்சா கடத்தலை அவர்களால் முழுமையாக தடுத்து நிறுத்த முடியவில்லை. கஞ்சா பொட்டலங்கள் எங்கிருந்து கொண்டு வரப்படுகிறது? இந்த கடத்தல் சம்பங்களில் ஈடுபடுபவர்கள் யார்? என்பதை கண்டுபிடிப்பதில் அவர்களுக்கு சிரமம் ஏற்பட்டது.

இதனையடுத்து கஞ்சா கடத்தலை தடுக்கும் விதமாக மதுரை சேர்ந்த போதை தடுப்பு பிரிவு போலீசார் நியமிக்கப்பட்டனர். அவர்கள் தொடர்ந்து வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று அவர்களுக்கு நாகை கடற்கரை வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்துவதற்காக வாகனத்தில் கஞ்சா மூட்டைகள் கொண்டு வரப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்படி நேற்று நாகை மாவட்டத்திற்குள் நுழையும் அனைத்து சாலைகளிலும் தடுப்புகள் அமைத்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

வேதாரண்யத்தை அடுத்த ஆக்காரன்புலம் வள்ளுவர் சாலை மெயின்ரோட்டில் சோதனை செய்து கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த கண்டெய்னர் லாரியை நிறுத்தி சோதனை செய்தனர்.

அப்போது கண்டெய்னருக்கும் முன்னும் பின்னும் 2 கார்களில் வந்த 5 பேர் கண்டெய்னரை திறக்கவிடாமல் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர்.

இதனால் சந்தேகம் அடைந்த போதை தடுப்பு பிரிவு போலீசார் கண்டெய்னரின் கதவை உடைத்துள்ளனர். அதனை பார்த்த 5 பேரும் தப்பி ஓட முயன்றனர். அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தப்பி செல்ல முடியாதபடி சுற்றி வளைத்தனர்.

அதனை தொடர்ந்து கண்டெய்னர் லாரியை திறந்து பார்த்போது கஞ்சா, பண்டல் பண்டல்களாக இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

ஒரு பண்டல் 2 கிலோ எடையில் உள்ளதும், அதுபோன்று 310 பண்டல்களில் 620 கிலோ கஞ்சா கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இவற்றின் மதிப்பு 30 லட்சத்துக்கும் மேல் இருக்கும் என கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து அந்த 5 பேரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில் சென்னை திருவெற்றியூரை சேர்ந்த ரமணன் (வயது 40), அதேபகுதியை சேர்ந்த தவமணி, கோடியக்காடு பகுதியை சேர்ந்த அய்யப்பன் (35), பரமாநந்தன் (35), செல்வராஜ் (54) என்பது தெரியவந்தது.

இவை கோடியக்கரை கடற்கரை வழியாக இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு வரப்பட்ட கஞ்சா பண்டல்கள் என விசாரணையில் தெரிய வந்ததாக கூறப்படுகிறது. மேலும் இவை எங்கிருந்து கொண்டு வரப்பட்டது? கஞ்சா கும்பலின் தலைவன் யார்? என்பது குறித்து தொடர்ந்து அந்த 5 பேரிடம் போதை தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் கடத்தி வரப்பட்ட கஞ்சா பண்டல்கள், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கண்டெய்னர் லாரி, 2 கார்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News