காசாவில் இஸ்ரேல் தாக்குதலில் 3 பத்திரிகையாளர்கள் உட்பட 11 பேர் கொலை
- அகதிகள் முகாமை படம் பிடித்துக் கொண்டிருந்த பத்திரிகையாளர்களின் வாகனம் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது.
- போர்நிறுத்தம் அமலுக்கு வந்த பிறகு இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் இதுவரை 470 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர்.
காசாவில் கடந்த அக்டோபர் 10 போர் நிறுத்தம் ஏற்பட்ட போதும் இஸ்ரேல் அவ்வப்போது வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
காசாவுக்குள் செல்லும் மனிதாபிமான உதவிகளுக்கும் உதவிக் குழுக்களுக்கும் இஸ்ரேல் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இதனால் மக்கள் சொற்ப நிவாரண பொருட்களும் கிடைக்காமல் அத்தியாவசிய தேவைகளுக்கும் அலைமோதி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று காசாவில் இஸ்ரேல் நடத்திய 3 வெவ்வேறு தாக்குதல்களில் 3 பத்திரிகையாளர்கள், 2 குழந்தைகள் உட்பட 11 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 6 பேர் காயமடைந்தனர்.
சாஹ்ராவில் எகிப்து அரசு தலைமையில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள அகதிகள் முகாமை படம் பிடித்துக் கொண்டிருந்த பத்திரிகையாளர்களின் வாகனம் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலில் அனஸ் குனைம், அப்துல் ரவூப், ஷாத் முகமது கெஷ்டா ஆகிய மூன்று புகைப்படக் கலைஞர்கள் கொல்லப்பட்டனர்.
கொல்லப்பட்ட பத்திரிகையாளர்கள்
பத்திரிகையாளர்கள் சென்ற அந்த வாகனம் டிரோன்களைப் பயன்படுத்தி ராணுவ ரகசியங்களைச் சேகரிக்க முயன்றதாகவும், அதனாலேயே வான்படை அந்த வாகனத்தைக் குறிவைத்துத் தாக்கியதாகவும் இஸரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
அதேபோல் முவாஸி பகுதியில் பெண் ஒருவர் இஸ்ரேல் படைகளால் சுட்டுக்கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
மேலும், புரைஜ் முகாமில் நடைபெற்ற ஷெல் தாக்குதல்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 சகோதரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும், மேற்கு காசா பகுதியில் 13 வயது சிறுவன் ஒருவனை இஸரேல் ராணுவம் சுட்டுக்கொன்றதாக அல் ஜசீரா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
காலையில் அவன் பசியுடன் விறகுகள் சேகரிக்கச் சென்றதாகவும், விரைவில் திரும்பி வருகிறேன் எனக் கூறியதாகவும் கொல்லப்பட்ட 13 வயது சிறுவனின் தாய் கண்ணீருடன் தெரிவித்தார்.
அக்டோபர் 10 போர்நிறுத்தம் அமலுக்கு வந்த பிறகு இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் இதுவரை 470 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே காசாவை நிர்வகிக்க டிரம்ப் உருவாக்கிய 'அமைதி'க் குழுவில் இஸ்ரேல் இணைத்துள்ளது.