வழிபாடு

நாளை வசந்த பஞ்சமி: கல்விக் கடவுள் சரஸ்வதி அருள் கிடைக்க விரதம் இருந்து வழிபடுங்கள்...

Published On 2026-01-22 12:40 IST   |   Update On 2026-01-22 12:40:00 IST
  • இந்த வசந்த பஞ்சமியை சரஸ்வதி ஜெயந்தி, சரஸ்வதி பஞ்சமி, ஸ்ரீ பஞ்சமி எனவும் அழைக்கின்றனர்.
  • மஞ்சள் என்பது வசந்த பஞ்சமியின் நிறம். இது ஆற்றல், செழிப்பு மற்றும் ஞானத்தை குறிக்கிறது.

தமிழில் 12 மாதங்களுக்கும் 12 விதமான நவராத்திரிகள் உண்டு என்கின்றன சாஸ்திர நூல்கள். ஆடி மாதத்தில் கொண்டாடப்படுவது ஆஷாட நவராத்திரி. புரட்டாசி மாதத்தில் கொண்டாடப்படுவது சாரதா நவராத்திரி. தை மாதத்தில் கொண்டாடப்படுவது சியாமளா நவராத்திரி. பங்குனி மாதத்தில் கொண்டாடப்படுவது வசந்த நவராத்திரி.

12 நவராத்திரிகள் இருந்தாலும் இந்த 4 நவராத்திரி காலங்கள் மிக மிக முக்கியமானவை என்கின்றனர் பெரியவர்கள்.

தை மாத சியாமளா நவராத்திரியில், ஒவ்வொரு நாளும் வீட்டில் உள்ள அம்பாள் படங்களுக்கு மலர்கள் சூட்டி வணங்குவது சிறப்பு. குறிப்பாக, செவ்வரளி முதலான மலர்கள் சூட்டி அலங்கரிப்பதும் ஏதேனும் ஒரு இனிப்பு நைவேத்தியம் செய்வதும் மிகுந்த பலன்களைத் தந்தருளும்.

பால் பாயசம், சர்க்கரைப் பொங்கல், கேசரி முதலான இனிப்புகளை நைவேத்தியமாகப் படைத்து அக்கம்பக்கத்தாருக்கு வழங்கலாம். தை அமாவாசைக்குப் பிறகு வருவதே சியாமளா நவராத்திரி. இந்தக் காலங்களில் வருகிற சதுர்த்தி விசேஷம். இதை மாக சதுர்த்தி என்றும் வரசதுர்த்தி என்றும் கொண்டாடுவார்கள்.

அதேபோல், சியாமளா நவராத்திரி நாளில் வரக்கூடிய பஞ்சமி திதி ரொம்பவே மகிமை மிக்கது. மகத்துவம் வாய்ந்தது. புத்தியில் தெளிவையும் மனதில் நம்பிக்கைச் சுடரையும் ஏற்றித் தந்தருளக்கூடியது. செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் சாரதா நவராத்திரியின் 9-ம் நாளில் சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது.

அன்று கல்வியில் சிறந்து விளங்க சரஸ்வதி தேவியை வழிபடுவார்கள். அதே போன்று சரஸ்வதியை வழிபட உகந்த மற்றொரு சிறப்பு வாய்ந்த நாள் வசந்த பஞ்சமி. பஞ்சமியில் மிக விசேஷமானது கருட பஞ்சமி, ரிஷி பஞ்சமி, வசந்த பஞ்சமி.

ஆடி அமாவாசைக்கு பிறகு வரும் பஞ்சமியை 'கருட பஞ்சமி' என்றும், ஆவணி மாதம் விநாயகர் சதுர்த்திக்கு மறுநாள் வரும் பஞ்சமியை ரிஷி பஞ்சமி' என்றும் வழிபடுவார்கள். அது போலவே தை அமாவாசைக்கு பின் வரும் பஞ்சமி திதி 'வசந்த பஞ்சமி' என்கின்றனர்.

சரஸ்வதி தேவியின் அருளை பெறுவதற்கான மிக சிறப்பான நாளாக வசந்த பஞ்சமி உள்ளது. மாணவர்கள், கலைஞர்கள், அறிவு சார்ந்த துறைகளில் இருப்பவர் அவசியம் கொண்டாட வேண்டிய திரு நாளாக வசந்த பஞ்சமி கருதப்படுகிறது.

மாதந்தோறும் இரண்டு முறை பஞ்சமி திதி வந்தாலும், தை மாத வளர்பிறையில் வரும் வசந்த பஞ்சமி சிறப்புக்குரிய நாளாகும். இந்த நாளை மிக முக்கியமான வழிபாட்டு நாளாக இந்துக்கள் கருதுகிறார்கள். வசந்த காலத்தின் தொடக்கமாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் சிறப்பு பூஜைகள் செய்து சரஸ்வதியை வழிபடலாம்.

இந்த வசந்த பஞ்சமியை சரஸ்வதி ஜெயந்தி, சரஸ்வதி பஞ்சமி, ஸ்ரீ பஞ்சமி எனவும் அழைக்கின்றனர். இந்த ஆண்டு வசந்த பஞ்சமி நாளை (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. பஞ்சமி திதி நாளை அதிகாலை 2:28 மணிக்குத் தொடங்கி நாளை மறுநாள் அதிகாலை 1:46 மணிக்கு முடிவடைகிறது. இந்த நேரத்தில் சரஸ்வதியை பூஜித்து வழிபட வேண்டும்.

நவராத்திரியில் வரும் சரஸ்வதி பூஜை அன்று செய்யப்படும் அனைத்து வழிபாடுகளையும் இந்த நாளில் மேற்கொள்ளலாம். இதன் மூலம் ஞானம், அறிவு, கல்வியில் வெற்றி ஆகியவை கிடைக்கும் என்பது நம்பிக்கை. வசந்த பஞ்சமி அன்று மஞ்சள் நிற உடையணிந்து கொள்வது நல்லது. மஞ்சள் அன்பு, செல்வ வளம், தூய்மை ஆகியவற்றை குறிப்பதாகும். சரஸ்வதி தேவியின் சிலையை வாசனை மிகுந்த மலர்களால் அலங்கரித்து, கேசரி படைத்து வழிபடுவது சிறப்பு. மாணவர்கள் தங்களின் புத்தகங்களை சரஸ்வதி படத்திற்கு முன் வைத்து வணங்கி, சரஸ்வதி தேவியின் அருளை பெற வேண்டும்.

உலகத்தை பிரம்ம தேவர் படைத்த பிறகு அவரது கையில் இருந்த கமண்டலத்திலிருந்து சில துளி நீர் கீழே சிதறியது. அந்த நீரில் இருந்து உருவானவர்தான் சரஸ்வதி தேவி. அதனால் தான் இந்த நாள் சரஸ்வதிக்கு உகந்ததாக கூறப்படுகிறது. திருமணங்கள், கல்வி மற்றும் வணிக முயற்சிகள் உள்ளிட்ட புதிய தொடக்கங்களுக்கும் இந்த திருவிழா மங்களகரமானதாக கருதப்படுகிறது.

மஞ்சள் என்பது வசந்த பஞ்சமியின் நிறம். இது ஆற்றல், செழிப்பு மற்றும் ஞானத்தை குறிக்கிறது. வழிபாடு செய்யும் முன் மஞ்சள் நிற ஆடைகளை அணிந்து, கேசரி அல்வா மற்றும் லட்டு போன்ற பாரம்பரிய மஞ்சள் நிற இனிப்புகளை தயார் செய்து சரஸ்வதி தேவிக்கு படைத்து தீப ஆராதனை செய்து வழிபட வேண்டும். இந்த நன்னாளில் விரதம் கடைப்பிடிக்கும் பக்தர்கள், மாலையில் அம்மனை வழிபட்ட பிறகு விரதத்தை முடிக்கலாம்.

வசந்த பஞ்சமியின் சிறப்பு

முருகனுக்கு உகந்தது சஷ்டி திதி, விநாயகருக்கு உகந்தது சதுர்த்தி திதி என்பது போல பஞ்சமி திதி வராகி அம்மன் வழிபாட்டுக்கு உகந்தது. ஆனால் ஒரு சில மாதங்களில் வரும் பஞ்சமி திதி மிக விசேஷமானவை.

ஆடி மாதத்தில் அமாவாசைக்கு பிறகு வரும் பஞ்சமி திதி கருட பஞ்சமி என்று நாக தோஷங்களை போக்கும் சக்தி வாய்ந்த நாளாகும்.

அதே போல ஆவணி மாதத்தில் விநாயகர் சதுர்த்திக்கு அடுத்த நாள் வரும் ரிஷி பஞ்சமி குரு தோஷங்களை போக்கும் என்று புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோலத்தான் தை மாதத்தில் வளர்பிறை பஞ்சமி வசந்த பஞ்சமி என்று கொண்டாடப்படுகிறது.

கல்விக்கு சரஸ்வதி, பகை வெல்ல வாராகி

பொதுவாகவே பஞ்சமி என்பது வாராகி அம்மனை வழிபட உகந்த திதி. குறிப்பாக, இந்த வசந்த பஞ்சமி நாளில் வாராகி அம்மன் வழிபாடு மிகவும் சிறப்புடையதாகும். ஸ்ரீ வாராகி மன சஞ்சலங்கள், வீண் கலக்கம், சத்ரு பயம் ஆகியவற்றை விலக்கி, சந்தோஷ வாழ்வளிக்கும் இந்தத் தேவி, சப்த மாதர்களில் ஒருவர்.

இந்த நாளில் விரதமிருந்து மாலை வாராகி அம்மனை வழிபட வாழ்வில் பகைவர்களால் உண்டாகும் தொல்லைகள் நீங்கும். மேலும், பூமி தொடர்பான பிரச்சனைகள் தீர வாராகி வழிபாடு மிகவும் முக்கியம். குறிப்பாக, வசந்த பஞ்சமி அன்று வாராகி வழிபாடு செய்வது மிகவும் சிறப்புவாய்ந்தது.

வசந்த பஞ்சமி திதியில், வாராகி அம்மனையும், கூடவே சரஸ்வதி தேவியையும் மனமுருக வழிபட்டால், துஷ்ட சக்திகள் அண்டாது. எதிர்ப்புகள் தவிடுபொடியாகும். இல்லத்தில் இதுவரை தடைப்பட்டிருந்த சுபகாரியங்கள், மங்கல விசேஷங்கள் தடையின்றி நிகழும். இல்லத்தில் தனம் தானியம் பெருகும். சுபிட்சத்தைத் தந்திடுவாள் என்கின்றனர் ஆன்மீக பெரியவர்கள்.

Tags:    

Similar News