செய்திகள்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்

ஆடு மேய்த்தவர் குரூப்-4 தேர்வில் முதலிடம்: விசாரணைக்கு ஆஜராக சிவகங்கை நபருக்கு உத்தரவு

Published On 2020-01-10 12:07 IST   |   Update On 2020-01-10 12:07:00 IST
குரூப்-4 தேர்வில் முதலிடம் பெற்ற சிவகங்கை நபரை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க டி.என்.பி.எஸ்.சி. உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கை:

தமிழக அரசின் அரசு பணியாளர் தேர்வுக்கான (டி.என்.பி.எஸ்.சி.) குரூப்-4 தேர்வு கடந்த ஆண்டு செப்டம்பர் 1-ந் தேதி நடத்தப்பட்டது. இதற்கான முடிவுகள் நவம்பர் மாதம் வெளியானது.

இதில் ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம், கீழக்கரை ஆகிய பகுதிகளில் தேர்வு எழுதிய 3,214 பேர் தேர்ச்சி பெற்றனர். 2 மையங்களில் அதிகம் பேர் தேர்ச்சி பெற்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

மேலும் முதல் 100 இடங்களில் 35 இடங்களை ராமேசுவரம், கீழக்கரை மையங்களில் தேர்வு எழுதியவர்கள் பிடித்ததால் போட்டித்தேர்வில் முறைகேடுகள் நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இது தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. உரிய விசாரணை நடத்தி வருகிறது. ராமேசுவரம் தேர்வு மையத்தில் தேர்வு எழுதியவர் சிவகங்கை அருகே உள்ள பெரிய கண்ணனூரைச் சேர்ந்த திருவராஜூ. இவர் 288.5 மதிப்பெண்கள் பெற்று குரூப்-4 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டத்தில் தேர்வு மையங்கள் இருந்தும் இவர் ராமேசுவரத்தில் தேர்வு எழுதியது ஏன்? என்ற சந்தேகம் அதிகாரிகளுக்கு ஏற்பட்டது.

இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்த டி.என்.பி.எஸ்.சி. முடிவு செய்தது. இதற்காக வருகிற 13-ந் தேதி சென்னை வரும்படி திருவராஜூவுக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

தேர்வு மையங்களில் முறைகேடு நடந்ததாக எழுந்த சந்தேகத்தில் டி.என்.பி.எஸ்.சி. விசாரணையை தொடங்கி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



டி.என்.பி.எஸ்.சி.யின் உத்தரவு குறித்து திருவராஜூ கூறியதாவது:-

நான் சொந்த ஊரில் பள்ளி படிப்பை முடித்து விட்டு சிவகங்கை அரசு கல்லூரியில் பி.எஸ்.சி. கணிதம் முடித்துள்ளேன்.

தற்போது ஆடு மேய்த்து வரும் நான் போட்டி தேர்வில் கலந்துகொண்டு போட்டி தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்ற வெறியோடு படித்து வந்தேன்.

இதுவரை 7 முறை டி.என்.பி.எஸ்.சி. தேர்வு எழுதியுள்ளேன். எனது விடாமுயற்சியால் மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளேன்.

ராமேசுவரம் பகுதியில் ஆடுகளை மேய்த்து வந்ததால் ராமேசுவரத்தில் கடந்த ஆண்டு தேர்வு எழுதினேன். என்னிடம் விசாரணை நடத்த வருகிற 13-ந் தேதி சென்னை வரும்படி டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

அதிகாரிகளின் விசாரணையில் நேரில் ஆஜராகி எனது விளக்கத்தை அளிப்பேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Similar News