செய்திகள்
கலெக்டர் பொன்னையா

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மூடப்படாத ஆழ்துளை கிணறுகள் கணக்கெடுப்பு

Published On 2019-10-29 13:25 IST   |   Update On 2019-10-29 13:25:00 IST
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறுகள் குறித்து கணக்கெடுக்க மாவட்ட கலெக்டர் பொன்னையா உத்தரவிட்டுள்ளார்.
காஞ்சிபுரம்:

மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சுஜித் 4 நாட்களுக்கு பிறகு இன்று பிணமாக மீட்கப்பட்டான்.

இதைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறுகள் குறித்து கணக்கெடுக்க மாவட்ட கலெக்டர் பொன்னையா உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக கலெக்டர் பொன்னையா நிருபர்களிடம் கூறியதாவது:-

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பயனற்ற ஆழ்துளை கிணறுகளை கண்டறிந்து உடனடியாக மூட வேண்டும். இனிமேல் மாவட்டத்தில் ஆழ்துளை கிணறு தோண்டுவதற்கு முன் மாவட்ட நிர்வாகத்திடம் முறையான அனுமதி பெற்று பாதுகாப்பு விதிகளை பின்பற்றி கிணறு தோண்ட வேண்டும்.

கிணறு தோண்டும்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும். பணி நடக்கும் பகுதியை சுற்றி முள்வேலி கம்பி அல்லது தடுப்பு கட்டாயம் அமைக்க வேண்டும்.

அதில் தண்ணீர் கிடைக்காத பட்சத்தில் ஆழ்துளை கிணற்றை முறையாக மூட வேண்டும். ஆழ்துளை கிணறு தோண்டும் பணி முடிந்த பிறகு மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் அளிக்க வேண்டும்.

மாவட்டம் முழுவதும் மூடப்படாத ஆழ்துளை கிணறுகளை கணக்கெடுக்கும் பணி நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.

இதற்காக உள்ளாட்சி அமைப்புகள், வி.ஏ.ஓ.க்கள் மற்றும் நிலஅளவை அதிகாரிகள் கணக்கெடுக்கும் பணியை தொடங்கி உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News