செய்திகள்
இடிந்து விழுந்த வீடு.

வாணியம்பாடியில் கனமழை - வீடு இடிந்து தாய், மகள்கள் 4 பேர் படுகாயம்

Published On 2019-08-19 06:49 GMT   |   Update On 2019-08-19 06:49 GMT
வாணியம்பாடியில் கனமழையில் வீடு இடிந்து விழுந்து தாய், மகள்கள் 4 பேர் படுகாயமடைந்தனர்.

வாணியம்பாடி:

வேலூர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. வேலூர், ஆம்பூர், வாணியம்பாடி, பேரணாம்பட்டு ஆகிய பகுதிகளில் பெய்த மழையால் குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வாணியம்பாடியில் நேற்று இரவு பெய்த பலத்த மழையால் கரிமாபாத் பகுதியை சேர்ந்த அன்வர் பாஷா என்பவரின் வீடு இடிந்து விழுந்தது.

இதில் அவரது மனைவி தில்ஷாத், மகள்கள் ஜபின், அம்ரின், பாமிலா ஆகிய 4 பேர் படுகாயமடைந்தனர்.

அவர்களது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர். இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்டு வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.அங்கு அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வாணியம்பாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் வளையாம்பட்டு பகுதியில் சாரதாம்பாள் என்பவருக்கு சொந்தமான குடிசை வீடு இடிந்து விழுந்தது.

வாணியம்பாடி அடுத்த ஆவாரங்குப்பம் பகுதியில் பாலாறுமண்ணாறு இணைக்கும் பகுதியில் மண்ணாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

தொடர் மழையால் வாணியம்பாடி மற்றும் கிராம பகுதிகளில் குடியிருப்பு பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. தாழ்வான வீடுகளில் மழை தண்ணீர் புகுந்தது. அதனை பொதுமக்கள் பக்கெட்டுகளில் நிரப்பி வெளியேற்றினர்.

Tags:    

Similar News